87 தடவைகள் குருதிக்கொடை வழங்கிய எழுத்தாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 தடவைகள் குருதிக்கொடை வழங்கியுள்ள எழுத்தாளர் ஒருவர் 87 ஆவது தடவையாகவும் குருதிக்கொடையினை வழங்கியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியான ஒழுங்கில் குருதிக்கொடையினை வழங்கி வரும் அவர் தன்னுடைய 87 ஆவது குருதிக் கொடையினை நேற்று முன்தினம்(23.03.2024) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் வழங்கியுள்ளார்.
தன்னார்வமாக முன்வந்து முறையாக ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ஒருமுறை தவறாது குருதியை தானம் செய்து வருகின்றார்.
87 தடவைகள்
யாழ்.போதனா மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளிலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி வைத்தியசாலைகளிலும் குருதிக்கொடையினை செய்துள்ளமையினை அவரிடம் உள்ள குருத்திக்கொடை பதிவேடுகளில் மூலம் அறிய கிடைத்துள்ளது.
மேலும் இவர் எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர், மற்றும் ஆசிரியருமாக பல்திறன் வெளிப்பாட்டாளராக காணப்படுவதுடன் இலக்கியத்துறையில் கவிஞர் நதுநசியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 48 தடவைகளும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 22 தடவையும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 தடவையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 04 தடவையும் யாழ். போதனா வைத்தியசாலையில் 10 தடவையுமாக 87 தடவைகள் குருதிக்கொடையினை செய்துள்ளார்.
தன்னுடைய பணியின் போதான காலங்களில் அருகிலுள்ள இரத்த வங்கிகளில் தன்னுடைய குருதியை தானம் செய்துள்ளார்.
முயற்சிக்கான உணர்வு
2009 ஆம் ஆண்டின் இறுதிப் போரின் போது குறுகிய காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவை குருதிக்கொடையினை வழங்கியுள்ளார்.
அவர் அன்று செய்த குருதிக்கொடை ஒன்றினால் செல்வீச்சில் தன் இரண்டு கால்களையும் இழந்த 16 வயதுடைய ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு காப்பாற்றப்பட்ட நபர் இன்று பட்டம் பெற்று கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தில் ஒரு அரசு உத்தியோகத்தராக கடமைபுரிவதாக தெரிவித்துள்ளார்.