சுவிஸிலிருந்து கொடுக்கப்பட்ட பணம்! யாழில் இளைஞர்கள் செய்த மோசமான செயல் (Photo)
அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவரை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அண்மையாகக் காணப்பட்ட சிசிரிவி காட்சிகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்துள்ளனர்.
அதனடிப்படையில் மானிப்பாய் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர் சம்பவத்தின் போது பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
காணிப் பிரச்சினை ஒன்றில் அயல் வீட்டுகாரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மானிப்பாயை சேர்ந்த ஒருவருக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அயல் வீட்டிற்கு பெற்றோல் குண்டு அடித்து வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்குமாறு கேட்டுள்ளார்.
அதன் காரணமாக மானிப்பாயை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று குறித்த சம்பவத்தை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர். அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
