வேர்ல்ட் விஷன் சாவக்ச்சேரி பிராந்தியத்தின் ENOUGH Campaign பரப்புரை
வேர்ல்ட் விஷன் சாவக்ச்சேரி பிராந்தியத்தின் ENOUGH Campaign பரப்புரையானது, நேற்று 11.07.2026 சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தலைமையில், சாவகச்சேரி வலயக்கல்வி பணிமனை, தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த பரப்புரை இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதத்தின் தொணிப்பொருளான "சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம்; இயற்கையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்" என்பதற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ENOUGH Campaign
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் போசாக்கு பிரிவுடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து வெளியிடப்பட்ட "ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளுக்கான கொள்கைகளை" குறித்த விழிப்புணர்வை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கும் நோக்குடன் ENOUGH பரப்புரையானது நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலையின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, இயற்கையான ஊட்டச்சத்துள்ள நமது சூழலில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் தயார்படுத்தப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
செம்முகம் ஆற்றல் குழுவின் போசாக்கு குறித்த விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டு, போசாக்கு மாதத்தின் தொனிப்பொருளுக்கமைய விழிப்புணர்வு சொற்பொழிவானது தென்மராட்சி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரியினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதான அம்சமாக, தென்மராட்சி பாடசாலை மாணவர்களினால், தங்களது ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, பின்வரும் ஆறு முக்கிய கோரிக்கைகள அடங்கிய மனுவொன்றையும் கையளித்திருந்தனர்.
1. பிரதேசத்திலுள்ள உணவகங்களில் சுத்தம் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
2. பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
3. பாடசாலை மாணவிகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு, குருதிச்சோகை தடுப்பு திட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

4. பிரதேசத்தில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள் குறித்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்புணர்வினையும் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய அறிவு பகிரப்பட வேண்டும்.
5. சிற்றுண்டி உரிமையாளர்கள் உள்ளூரில் கிடைக்கும் ஊட்டச்சத்து உணவுகளை அடிப்படையாகக் கொண்ட சமையல் முறைகளை பிரபலப்படுத்தி போசாக்கு மட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
6. போசாக்கு மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி கருவிகள் மற்றும் சிறுவர் நட்பு கற்றல் கருவிகளை சிறுவர்கள் மத்தியில் பயன்படுத்த ஊக்குவித்தல் வேண்டும்.
என்ற கோரிக்கைகளோடு, 5000 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகள் கையொப்பமிட்ட மனுவினை அரச அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு பெரும் பங்களிக்கும் விதமாக, வேர்ல்ட் விஷன் சாவகச்சேரி பிராந்திய நிகழ்ச்சி திட்டமானது, தென்மராட்சி வலயக்கல்வி பணிமனையுடன் இணைந்து தென்மராட்சியில் அமைந்துள்ள 10 பிரதான பாடசாலைகளில், செம்முகம் ஆற்றல் குழுவின் உதவியுடன், போசாக்கு மாதத்தின் தொனிப்பொருளிற்கமைய வீதி நாடகமொன்றின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிகழ்வில், வேர்ல்ட் விஷன் இலங்கை நிறுவனத்தின் தேசிய இயக்குனர் தனன் சேனாதிராஜா மற்றும் தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி செல்வநாயகம் அச்சுதன், தென்மராட்சி வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் நாயகம் கிரிஸ்தோபர் கமலராஜன், வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வடக்கு, வடமேற்கு வலய முகாமையாளர் ஜூட் நிஷாந்தன், தென்மராட்சி வலயக் கல்வி பணிமனையின் பிரதி பணிப்பாளர் பரணிதரன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.