ஐரோப்பாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பாரிய மோசடி அம்பலம்
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பேராதனை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவர், 1,250,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேக நபரை கைது செய்வதற்காக பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் பேராதனை பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்கு சென்ற போதிலும் சந்தேக நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால் கண்டி மாகாண காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடி
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலையை பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு சரியான உரிமம் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை
வேலைக்கான சரியான ஆணையை நிறுவனம் பெற்றுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை தேடுவோர் www.slbfe lk இணையதளம் அல்லது 1989 இலக்கத்திற்கு அழைத்து, தகவல்களைப் பெறுமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.