இலங்கையில் பெண்கள் கடுமையாகப் புறக்கணிப்பு: குகதாசன் எம்.பி குற்றச்சாட்டு
உலக அளவில் நாடாளுமன்றப் பெண் பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026)இடம்பெற்ற அமர்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும் பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண் பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும்.
பெண் பிரதிநிதித்துவம்
ரூவாண்டா நாட்டின் நாடாளுமன்றம் 61 வீதத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளமையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.

நமது அயலில் உள்ள இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இது 50 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது. நாட்டில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 25 பேரில் இருவர் மட்டுமே பெண்களாவர்.இது எட்டு சதவீதமாகும்.
கனடா நாட்டு அமைச்சரவையில் 50 சதவீதமானோர் பெண்கள் ஆவர். இந்தநிலை 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது என்பதனை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.
பொருளாதார மீட்சி
நாட்டில் உள்ள 25 அமைச்சுச் செயலாளர்களில் நால்வர் மாத்திரமே பெண்களாவர்.இது 16 சதவீதமாகும்.

குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் வேலைகளைக் கைவிடுவதைத் தடுக்க; குறைந்த செலவிலான குழந்தை காப்பகங்கள், முன்பள்ளிகள், நெகிழ்வுத்தன்மை கொண்ட பணி நேரங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு வசதிகளைச் சட்ட அடிப்படையிலானதாக்க வேண்டும்.
இலங்கையில் மகளிர் வலுவூட்டல் என்பது ஏதோ ஒரு சாராரருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல. மாறாக அது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் சனநாயக முதிர்ச்சிக்கும் இன்றியமையாத ஒரு முதலீடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.