கடை ஒன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் : பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்
காலியில் (Galle) கடையொன்றில் வைத்து பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உரகஸ்மன்ஹந்திய (Uragasmanhandiya) பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டிக்கர் கடையொன்றில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊராகொட விதானகே யமுனா நிரோஷனி விதான என்ற வயது 43 பெண்ணே கடையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை எல்பிட்டிய பதில் நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மனைவி கணனியில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவர் வந்து கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் எல்பிட்டியைச் சேர்ந்த லால் நிஷாந்த என்ற 25 வயதுடைய இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கொலையாளிகள் இருவரும் மனைவியிடம் பணம் கேட்டதாகவும், பணத்தை கொடுக்காததால், கூரிய ஆயுதத்தால் அவரது கழுத்தில் தாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் கணவரின் வாக்குமூலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவன் கைது
மேலும், கொலையாளிகள் எந்த திசையில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட நபரின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.