தமிழர் பகுதியில் வயோதிப பெண்ணிடம் கொள்ளை: சந்தேகநபர் தப்பியோட்டம்
மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி கழுத்தில் இருந்த 10 பவுண் கொண்ட தங்க ஆபரணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைதினம் (02.10.2023) இடம்பெற்றுள்ளது.
67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனிமையில் பெண்ணிடம் வீட்டினுள் உப்புகுந்து அவருடன் உரையாடிவிட்டு பின்னர் அவரை வெளியே அழைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.
வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து வயோதிப பெண்ணின் சத்தம்கேட்டு அயலவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் மற்றுமொரு சம்பவம்
திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று காலை பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலக்கத்தகடு இல்லாத இருசக்கரவாகனத்தில் வந்த ஒரு இளைஞரால் மேற்படி கொள்ளை இடம்பெற்றதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை துரத்திச்சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடைபெறுவதாக
துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.