கிளிநொச்சி பூநகரியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தெளிகரையில் அமைந்துள்ள தனது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயிற்று பகுதியில் வெட்டுகாயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையின் பின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.