நண்பியின் ஏ.ரி.எம். அட்டையில் இருந்து பணத்தை திருடிய பெண் கைது
அநுராதபுரம் - தம்புத்தேகமவில் தனது நண்பியின் ஏ.ரி.எம். (A.T.M) அட்டையை திருடி தானியக்க இயந்திரத்தில் பணத்தை பெற்ற இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புத்தேகமவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்காகச் சென்ற இளம் பெண்கள் இருவர் மிகவும் குறுகிய காலத்திற்குள் தமது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறும் வகையில் நெருக்கமான நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நண்பி உணவு எடுப்பதற்காக வெளியே சென்ற போது சந்தேகநபர் குறித்த பெண்ணின் கைப் பையைத் திறந்து அவருடைய ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அவசர அவசரமாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
இவ்வாறு ஏ.டி.எம் அட்டையை திருடிச் சென்ற நண்பி வங்கி தானியக்கி இயந்திரத்திற்குச் சென்று ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 36,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதுடன் தம்புத்தேகமவில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குச் சென்று இரண்டு தங்க மோதிரங்களை கொள்வனவு செய்வதற்காக முற்பணத்தை வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது கைப்பை காணாமல் போயுள்ளமை பற்றி கைப்பையின் உரிமையளரான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆடைத் தொழிற்சாலையின் சீ.சீ.ரி.வி (C.C.T.V) காணொளிகளை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது கைப்பையின் உரிமையாளருடன் மிகவும் நெருக்கமான நண்பராக பழகிவந்த இளம் பெண்ணே குறித்த ஏ.ரி.எம். அட்டையை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
