ஜெயிலர் சென்ற மோட்டார் சைக்கிளுக்குள் போதைப்பொருளை வைப்பதற்கு திட்டம் தீட்டிய பெண் கைது
திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெயிலரை பழிவாங்கும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை நபர் ஒருவருக்கு வழங்கிய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை-மட்கோ மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.எச். இனோகா நில்மினி (43வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
2021 ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி மட்கோ பகுதியிலுள்ள வீட்டிலிருந்து சிறைச்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த ஜெயிலர் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த ஜெயிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த ஜெயிலர் பயணித்த மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவர் வழங்கிய தகவலையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை வைக்குமாறு கூறிய பெண்ணொருவர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அடுத்துக் குறித்த மோட்டார் சைக்கிளில் போதைப் பொருளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டிய பெண்ணொருவரை நேற்றிரவு(12) கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறித்த பெண்ணின் மகன் (மலிந்த பின்சர) திருகோணமலை சிறைச்சாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.