அரசின் அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை
அரசின் அதிகாரபூர்வ அனுமதியின்றி பாடசாலைக்குள் நிகழ்வுகளை நடத்துவதற்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் அனுமதியில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு அமைப்புகளாலும் வெளித்தரப்பினராலும் முன்வைக்கப்படும், அரசின் உத்தியோகபூர்வ அனுமதி பெறாத எந்தவொரு திட்டத்தையும் அல்லது நிகழ்வையும் பாடசாலை அமைப்பிற்குள் நடத்துவதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண சபை வளாகத்தில் இன்று வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.
அரசாங்கம் என்ற ரீதியில் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக பெருமளவிலான அர்ப்பணிப்புகளைச் செய்து வருவதால், "பிள்ளைகளுக்கு சிறந்தவற்றையே வழங்க வேண்டும்" என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

அண்மையில் வீசிய 'தித்வா' சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளை புனரமைப்பது குறித்தும், தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தரம் (A/L) ஆகிய பரீட்சைகளின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு இந்த 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.