பொலிஸ் தரப்பால் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை.. விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
தங்காலை குற்ற விசாரணைப் பிரிவிடம் தாம் அளித்த வாக்குமூலத்தை பொலிஸ் தரப்பு முழுவதுமாகத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட 'பெலியத்த சனா' அல்லது 'புவக்குதண்டாவே சனா' என்ற நபர் குறித்து தாம் ஊடக சந்திப்பில் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், தங்காலை குற்ற விசாரணை பிரிவினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று (09.10.2025) வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுமார் மூன்று மணி நேரம் வழங்கப்பட்ட தனது முழுமையான வாக்குமூலத்தின் சில பகுதிகளை மட்டுமே, பொலிஸ் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுயாதீனத்தன்மை
பொலிஸ் தரப்பு, வேண்டுமென்றே அந்தப் பகுதிகளை திருத்தியமைத்து ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், பொலிஸ் தரப்பு, 'புவக்குதண்டாவே சனா' மற்றும் அவரது அரசியல் தொடர்புகள் பற்றிய உண்மையை சமூகத்திடம் இருந்து மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பேசப்படும் ஒரு விடயம் குறித்து அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை விசாரித்து, அதன் உண்மையை கண்டறிவதற்குப் பதிலாக, தமக்குத் தேவையானவாறு திருத்தியமைத்து வெளியிடுவதன் மூலம் பொலிஸ் துறை தன்னுடைய சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
இந்தநிலையில், பொலிஸ் தரப்பு, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை முழுவதுமாகத் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை என்றும், இது சட்டத்தைப் மதிக்கும் பொலிஸுக்கு ஏற்ற செயல் அல்ல, மாறாக அரசின் சேறுபூசும் படைக்கே இது பொருத்தமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




