கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பில் இன்று (18) போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்ததற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று (18) போர் வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டிருந்தது.
ஒத்திகையும் மற்றும் ஏற்பாட்டு பணிகள்
தேசிய போர் வீரர்கள் நினைவு நாள் விழா நாளை (19) ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் போர் வீரர்கள் நினைவிடத்தின் முன்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒத்திகையும் ஏனைய ஏற்பாட்டு பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, முன்னாள் விமல் வீரவன்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், அனுமதியின்றி போர் வீரர்கள் நினைவிடத்திற்குள் நுழைய முயன்று, ஒத்திகைப் பணிகளுக்கும் அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அங்கிருந்த குழுவினர் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச்செல்ல முயன்ற நிலையில், விமல் வீரவங்சவின் அதிரடி தலையீட்டை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
இந்த சட்டவிரோத மற்றும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அவரது குழுவினருக்கு எதிராக அடுத்த கட்டமாக உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri