பெண்களுக்கான உரிமைகள் மகளிர் தினத்திலாவது விடிவு கிட்டுமா
சர்வதேச அளவில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் அது ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்தும் வித்தியாசமாக உள்ளது. 1977ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடத் தொடங்கியது. அதே தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பெண்மையை கொண்டாடும் நாளாக அறிவித்தன.
1908ல் ஆரம்பித்து 1910ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தொழிலாளர் தினம் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கொண்டாட்டம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் தினத்திற்கான இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் உரிமைகள் சமத்துவம் சமனாக அதிகாரமளித்தல்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, எமது நாட்டில் "சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்ச்சி' நடத்தப்படுகிறது, இம்முறை '"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் - அவள் ஓர் வலுவான வழிகாட்டி'"என்ற தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி திட்டங்கள்
இலங்கையை பொறுத்தமட்டில் தேசிய மகளிர் தின வைபவ நிகழ்ச்சி 2025 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பித்து, 2025 மார்ச் 8 ஆம் திகதி வரை அனுஷ்ரிக்கப்படவுள்ளது.
இதில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது பெண் தொழில் முயற்சியாண்மையால் நாட்டை கட்டியெழுப்புவோம், வினைத் திறன் மிக்க தொழிற்படையை உருவாக்குதல் உள்ளிட்ட எட்டு விடயங்களை முன்வைத்து இம் முறை தேசிய மகளிர் தின வைபவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாயகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது தவிர பெண்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்படுகிறது.
பெண் பிள்ளைகள் இளவயது திருமணத்தை குறைத்து கல்விமட்டத்தை அதிகரிப்பதன் ஊடாகவும் மற்றும் சுயதொழில் ஒன்றை மேற்கொண்டு வருமானத்தை உயர்த்துவதன் மூலமாகவும் மகிழ்ச்சி கரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன் நிலையான எதிர்காலத்தை யும் ஒவ்வொரு பெண்ணும் உருவாக்கலாம்.
இது குறித்து திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.பாமினி தெரிவிக்கையில் பெண்களுக்கான சம உரிமை சில வேலைகளில் மறுக்கப்படுகிறது கூலித் தொழிலின் போது சம்பளத்தில் பாகுபாடு காட்டப்படுவதுடன் ஒரே வேலையை ஆண் பெண் என செய்தாலும் இங்கு உரிமை மறுக்கப்படுகிறது.
இது போன்று மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தொழில் நிமித்தம் உடல் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர் இதனால் இதற்கு சலுகைகளை வழங்குவதன் மூலமாக பாதுகாப்பை பெறமுடியும் தற்போது அரசியலில் பெண்களுக்கு 50வீதமான பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டாலும் அடிமட்டத்தில் உள்ள பெண்களை ஈடுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
உரிமைகள் கல்வி சமத்துவம் தன்னம்பிக்கையுடன் கூடிய பால் நிலை சமத்துவத்தையும் இதன் மூலமாக பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் போதே ஆரம்பத்தில் இருந்து இதனை உருவாக்க வேண்டும் பாலின கல்வியை ஆரம்பப் பாடசாலை முதல் பல்கலைக்கழக கல்வி வரை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது குழந்தைகளை சரியாக வளர்ப்பதன் ஊடாக எதிர்காலத்தில் வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கலாம்.
இவ்வாறாக நாட்டில் பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் , சுதந்திரம் பற்றி பேசப்பட்டாலும் மகளிர் தின கொண்டாட்டங்களை வெறும் என விழாவாக கொண்டாடினாலும் பல தரப்பட்ட உரிமைகளும் சுதந்திரங்களும் மறுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலை பற்றி தம்பலகாமம் பகுதியை சேர்ந்த பெண் சமூக சிவில் செயற்பாட்டாளரான வல்லியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தெரிவிக்கையில் இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் இருக்கு என்று சொல்ல முடியாது மகளிர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வியும் சில வேலை எழுகின்றது குறித்த தினத்தை கொண்டாடுவதற்காக மாத்திரம் கொண்டாடி எவ்வித பலனுமில்லை இது நடைமுறையில் இல்லாத ஒன்றாக காணப்படுகிறது. நூற்றுக்கு ஐம்பது வீதம் இருந்தாலும் சுதந்திரத்தை முழுமையாக காணமுடியாது எதிர்காலத்தில் தற்போதுள்ள சுதந்திரமும் இருக்குமோ என்ற சந்தேகம் தான் எங்களிடம் உள்ளது என்றார்.
இலங்கையை பொறுத்தமட்டில் பெண்கள் பல அரச சார்பற்ற அரச துறைகளில் உயர் பதவிகளில் குறைவாக காணப்படுகின்றார்கள் அரசியலமைப்பில் சொல்லப்பட்ட உரிமைகள் சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன கடந்த காலங்களில் உள்ளூராட்சி தேர்தலின் போது 25வீதமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என ரணில் மைத்திரி அரசாங்கத்தின் நல்லாட்சி காலத்தில் சொல்லப்பட்டாலும் கூட சில உள்ளூராட்சி சபைகளில் கட்சிகளால் அது நடைமுறையில் சாத்தியமாக்கப்படவில்லை என்பதை கண்டு கொள்ளலாம்.
இது குறித்து திருகோணமலை நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான திருமதி கோகிலவதனி கண்ணன் தெரிவிக்கையில் " பெண்களுக்கான சுதந்திரம் இல்லை என்றே கூறலாம் ஏன்எனில் இன்றைய கால கட்டத்தில் வீட்டில் இருந்தே அது ஆரம்பிக்கிறது ஊடகத் துறையினை பார்த்தால் ஊடகனாக வெளியில் சென்றால் வித்தியாசமாக பார்க்கிறார்கள் இது போன்று வீட்டில் அம்மா அப்பா பிள்ளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளது
மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றால் கூட வித்தியாசமாக பார்க்கிறார்கள் பெண்கள் எவ்வளவோ சாதிக்க வேண்டியவர்கள் இத்தகைய நவீன காலத்தில் எங்களது சுதந்திரம் பறிக்கப்படுகின்றதே தவிர உரிமைகள் அனுப்பவிக்க முடியாத நிலையில் உள்ளது சமூக வலைத்தளங்களில் கூட பாவனையின் போது தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்.
இது போன்று விரும்பிய ஆடை அணியும் சுதந்திரம், பயணங்களின் போதான பாதுகாப்பற்ற நிலை தான் காண முடிகிறது எனவே தான் ஒட்டுமொத்தமாக சுதந்திரத்துடன் கூடிய உரிமைகள் இல்லை என்றே சொல்ல முடியும் . சர்வதேச ரீதியில் பத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே பெண்கள் அரச தலைவர்களாக உள்ளனர்.
பெண்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் உயர்மட்ட வர்த்தகம், கைத்தொழில் துறைகளில் தீர்மானம் மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் குறைந்தளவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் உரிமைகள் இருப்பது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி, வேலை, அரசியலில் கலந்து கொள்வது, வாக்குரிமை, உடல் மற்றும் பிற மனித உரிமைகள் போன்ற பல அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றும் சட்டங்கள் உள்ளன.
ஆனாலும் அது நடைமுறைச் சாத்தியத்தில் பாதுகாக்கப்படுவதில்லை எனினும், சமூகத்தில் இன்னும் பல சமுதாயப் பிரச்சினைகள், பணவீக்கம், பாலின சமத்துவம் குறித்த சவால்கள், மற்றும் துயரமான குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக பெண்கள் சில பகுதிகளில் முழுமையான உரிமைகளை அனுபவிக்க முடியாது.
இதன் மூலம், சட்டப்படி பெண்கள் பல உரிமைகளைக் கொண்டிருந்தாலும், அவற்றை நடைமுறையில் நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் உள்ளன. இலங்கையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற போதிலும் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது முக்கியமான மற்றும் எளிதில் கவனிக்கப்படாத சமுதாய மற்றும் கலாச்சார சவால்களைக் குறிக்கின்றது.
இவை பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன: இலங்கையில் பல பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில், பாரம்பரிய மற்றும் கலாச்சாரமான பொது கருத்துக்களுடன் கூடியதன் காரணமாக, பெண்களின் உரிமைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் அல்லது சமூகத்தில் கீழ்ப்படிவான நிலைகளில் இருக்கக்கூடியவர்கள் என்பதுடன் மென்மையானவர்கள் என்பதே யதார்த்தம் அவர்களின் எண்ணங்களை அல்லது விருப்பங்களை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம் இதனால் கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் போகலாம் எடுத்து காட்டாக கவனயீர்ப்பு போராட்டங்களில் தங்களது உரிமைகளை வலியுறுத்தி போராடுகின்ற போது பெண்களின் கைது ஒரு விடயமாக காணப்படுகிறது
இதனால் சுதந்திரமற்ற தன்மை அங்கு உருவாக்கப்படுகிறது மேலும் பெண்கள் தொழிலாளர் உரிமைகள், கல்வி, அல்லது சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய அவசியமான வாய்ப்புகளை பறிமாறி விடுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலின வித்தியாசங்கள், மற்றும் கல்வி அல்லது வேலையில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படாமை போன்ற சிக்கல்கள் அடிக்கடி இருக்கின்றன.
இது பெண்கள் சமுதாயத்தில் தங்களை முழுமையாக அறியவோ அல்லது முன்னேற்றப்படவோ முடியாது எனும் நிலையை உருவாக்குகிறது. அரசியல், சட்ட, மற்றும் சமூக மாற்றங்கள் கட்டாயமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பெண்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் இருப்பினும், அவை அனைத்து சமூகத் தொகுதிகளிலும் சமமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பல் வேறுபட்ட சமூக பிரச்சினைகளால் பெண்கள் இன்னும் சில சமுதாயங்களில் அவர்களுடைய முழு உரிமைகளை அனுபவிக்கவில்லை.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக மகளிர் தினம் கொண்டாடுவது மட்டுமே முழுமையான உரிமைகளுக்கான தீர்வு அல்ல தீர்வை அரசாங்கம் பெண்களுக்காக இந்த விசேட நாளில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலமும் கடுமையான சட்டங்கள் ஊடாக தீர்வை வலியுறுத்துவதனாலும் உரிமை சுதந்திரம் பாதுகாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.