உள்ளூர் அதிகார சபை தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முறையாக பகிரப்படுமா..!
இலங்கை அரசியல் வரலாற்றில் ஆண்களைப் போன்று பெண்களும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமைகள் அரசியலமைப்பின் 1978 2ம் குடியரசு யாப்பில் சொல்லப்பட்டாலும் அது மறுக்கப்படுகிறது குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் உரிமையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகிறது.
இதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தத்தின் பிரகாரம் பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலின் போது 25 வீதமாக வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் அது பல விமர்சனங்களுக்குள்ளாகியது.
பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
இது குறித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆரம்ப காலங்களில் இருந்து எந்தவொரு தேர்தலாயினும் சரி அது நாடாளுமன்றமோ, மாகாண சபையோ, உள்ளூராட்சி மன்றமாயினும் சரி மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
அதன் பின் மிக நீண்ட காலமாக சிவில் அமைப்புக்கள் மற்றும் தேர்தல் தொடர்பான நிறுவனங்கள் குரல் கொடுத்ததன் விளைவாக 2017ஆம் ஆண்டில் பெண்களுக்காக 25 வீத கோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
கோட்டா மூலமாக பெண்கள் பிரதிநிதிகளின் தொகை அதாவது வேட்புமனு தாக்கல் செய்கின்ற போது நேரடியாக வட்டாரங்களில் பட்டியலில் போட்டியிடுகின்ற நூற்றுக்கு பத்து வீதமும் மேலதிக பட்டியலில் நூற்றுக்கு ஐம்பது வீதமும் பெண்கள் உள்வாங்கப்பட்டார்கள்.
இதன் பின் 2018ல் பெண் வேட்பாளர்களை கவனத்திற் கொள்ளாது ஆண்களின் பெயர்களை மாத்திரம் வேட்புமனுவின் போது நியமித்ததன் மூலம் குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இது போன்று சில கட்சிகள் தங்கள் உறவினர்களில் இருந்து குறிப்பாக மனைவி, சகோதரர்களை இதில் வேட்பாளர்களாக அரசியல் ரீதியாக நியமித்தார்கள் ஆனால் அரசியல் பெண் செயற்பாட்டாளர்களை இங்கு கவனிக்காமை செயற்பட்டார்கள்.
எது எவ்வாறாக இருந்தாலும் 2015 க்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் நூற்றுக்கும் குறைவான பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .
2018 புதிய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 2000 ற்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் தேர்வாகினார்கள் இதில் எல்லாவற்றையும் அரசியல் செயற்பாட்டாளர்கள் என கூற முடியாது.
குறிப்பிட்ட தொகையானவர்கள் மாத்திரம் தான் அரசியல் செயற்பாட்டாளர்களாக உள்ளார்கள் ஏனையோர்கள் பெயரளவில் மாத்திரம் தான் உள்ளதை கண்காணிக்க முடிகிறது என்றார்.
தற்போது உள்ளூர் அதிகார சபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனுக்களை கையளித்தனர் இதில் பல தேசிய கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் நியமிக்காமையால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மொத்தமாக மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் பிரகாரம் 8325 உறுப்பினர்களில் சுமார் 1919 பெண் உறுப்பினர்களே காணப்பட்டார்கள் இது 23 வீதத்தை காட்டுகிறது.
இவ்வாறு இருந்த போதிலும் நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமான பெண்களே காணப்படுகிறார்கள்.
வெறும் கண் துடைப்பு
இவ்வாறான நிலையில் இது குறித்து திருகோணமலையை சேர்ந்த பெண் சமூக சிவில் செயற்பாட்டாளரான எம்.என்.இல்முநிசா தெரிவிக்கையில்,
பெண்களுக்கும் அரசியல் உரிமை என்பது வரவேற்கத்தக்கது ஆனாலும் 25 சதவீதமான ஒதுக்கீடு என்பது வெறும் கண் துடைப்பு இதிலும் ஆண்களே சபைக்கு பிரதிநிதிகளாக அந்த கதிரைக்கு செல்கிறார்கள்.
வெறும் வேட்புமனுவுக்கு மாத்திரமே பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது.இது பெண்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமையை எடுத்துக் காட்டுகிறது என்றார்.
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 25% பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பில், பல முக்கிய விடயங்கள் கூறப்பட்டாலும் அது காலத்துக்கு காலம் பேசு பொருளாக மாறியுள்ளது.
இறுதியாக நடைபெற்ற தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எந்தவொரு பெண் பிரதிநிதிகளும் உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.
உள்ளூராட்சி சபைச் சட்ட திருத்தத்தில் 25% பெண்களுக்கான ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், உள்ளூராட்சி சபைகளில், அதாவது நகர் புறம், கிராமப்புற மற்றும் நகராட்சி உள்ளூராட்சி சபைகளில், சபை உறுப்பினர்களாக பெண்களுக்கான 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நிலை மாத்திரம் இருந்த போதிலும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியலில் ஆர்வமுள்ள பெண்கள் வெறும் கனவுகளாக மாத்திரமே உள்ளது என்பதை எம்மால் அறிய முடிகிறது.
இவ்வாறான பெண்களுக்கான ஒதுக்கீடு, அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு பெற வாய்ப்பு அளிக்கும் என்று அரச மற்றும் பல சமூக ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனினும், சில எதிர்ப்பு கருத்துகளும் எழுந்துள்ளன.
அதில், இந்த ஒதுக்கீடு, சீரான பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாது, அல்லது இதன் மூலம் பெண்கள் இடஒதுக்கீடாக வருவதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்துகள் உள்ளன.
சில வேளை, உள்ளூராட்சி சபைகளில் குறிப்பிட்ட நிலைப்பாடுகளை மாற்றுவதற்கு இந்த 25% ஒதுக்கீடு சரியான தீர்வாகவோ அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தொடக்கமாகவும் இருக்கின்றது.
பெண்களின் பொருளாதார நிலை
இவ்வாறான நிலை குறித்து திருகோணமலை சோலையடி கிராமத்தை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர் எஸ்.விஜிதா தெரிவிக்கையில்,
பெண்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என தத்தளித்தாலும் அவர்களுக்கான பயிற்சிகள் கிராமப் புறம் தொடக்கம் கொழும்பு வரை நடை பெறுகிறது.
சில கட்சிகள் சரியான அங்கீகாரம் பெண்களுக்கு வழங்குவதில்லை இதன் காரணமாக சுயேட்சை குழு மூலமாகவும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆண்கள் அரசியலில் இறங்கினால் தனது காணியை அடகு வைத்தாவது ஈடைபடலாம் ஆனால் பெண்களின் பொருளாதார நிலை காரணமாக அரசியலில் இறங்க முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும் பெண்களுக்கான பாதுகாப்பை தேர்தல் ஆணையாளர் விசேடமாக இம் முறை அறிவிக்க வேண்டும் அரசியலுக்கு முன்வந்து இறங்கிய போதும் சில வேலையில் புகைப்படங்களை இட்டு வேறு வகையில் சம்பவங்களை நிகழச் செய்கின்றனர்.
ஆனால் பொலிஸ் பிரிவில் பெண்களுக்கான அமைப்பு இருக்கிறதா நாங்கள் முறைப்பாடளித்தால் உடனே வருவார்களா தீர்வினை தருவார்களா இல்லை நாளை அல்லது அதன் பின்பே வருவார்கள் எனவே தான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் இலங்கையை பொறுத்தமட்டில் பெண்கள் தொகையில் 52 வீதமானவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தேர்தலின் போது பெண்கள் பெண்களுக்கு வாக்களிப்பதில்லை எனவே தான் அரசியலுக்காக பெண்களுக்கு எவ்வளவோ விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கினாலும் பெண் பிரதிநிதித்துவம் என்பது குறைவாகவே உள்ளது என்றார்.
அரசியலில் பெண்கள்
இவ்வாறாக கடந்த கால ஆட்சியாளர்களினால் வடகிழக்கில் சிறுபான்மை கட்சிகள் கூட சரியான பிரதிநிதித்துவங்களை கிராமம் புற மக்களுக்கு வழங்கவில்லை பல பெண் சிவில் சமூக அமைப்புக்கள் நீண்ட காலமாக போராடிய நிலையில் இருந்தாலும் 25 வீதமான பிரதிநிதித்துவம் என்பது சரியாக கண்காணிக்கப்பட்டு செயற்படுத்தப்படவில்லை என்பது மேற் குறித்த கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது.
இவ்வாறான நிலை குறித்து திருகோணமலை சம்பூர் பகுதியை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் செல்வரட்ணம் கௌரி தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் அரசியல் என்பது ஒரு சாக்கடை என நினைத்தேன் தற்போது பல தெளிவூட்டல் வலுவூட்டப்பட்டதன் ஊடாக அரசியலுக்குள் களமிறங்கியுள்ளேன்.
ஆண் வர்க்கம் பெண்களை முடக்க நினைக்கிறார்கள் அவ்வாறில்லாம் சகோதரங்களை போன்று அரசியலுக்குள் வலுவூட்ட வேண்டும் பெண் என்பவள் தான் ஊழலற்ற நிர்வாகத்துக்கும் பொருளாதார முன்னேற்றங்களுக்கும் உறுதுனையாக இருக்கிறார்கள் எங்களை தடையின்றி முன்னேற வழி விடுங்கள் அப்போது தான் ஆளுமை மிக்கவர்களாக திகழ முடியும் என்றார்.
அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது முக்கிய கோட்பாடாக காணப்படுகிறது இதற்காக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இம் முறை நடை பெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் 25 வீதமான ஒதுக்கீடுகளை தேசிய கட்சிகள் ஆளும் எதிர் கட்சிகள் என பல கட்சிகள் ஒன்றினைந்து இவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதனால் அரசியலில் பெண்களுக்கான உரிமையும் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படலாம்.
