சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு கைதிகளை வாழவைக்குமா..! அருட்தந்தை சத்திவேல் கேள்வி
தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா என சிந்திக்க வைத்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் அரசியல் கைதிகளுக்கான அடிப்படைத் தேவைகள் சரியான முறையில் கிடைக்கின்றனவா என தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத திட்டமிட்ட தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாரால் தேடப்படும் நிலையில், சரணடைந்த விதமும் அதே வேகத்தில் பிணையில் வெளியே வந்த முறைமையும் பல வருடங்களாகப் பிணையின்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கும் ஏனைய கைதிகளுக்கும் மட்டுமல்ல பொது மக்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வாகவே உள்ளது.
பிரதமர் மக்களுக்கு வழங்கிய அறிவித்தல்
பணபலமும் அதிகாரமும் நீதிதேவதையின் கண்களில் மண்ணை தூவிவிடுமோ எனும் பயமும் சந்தேகமும் மக்கள் மனதில் ஏற்படுவது தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இது இவ்வாறிருக்க தற்போதைய நாட்டின் பொருளாதார நிலையில் "பொதுமக்கள் இரண்டு வேளை உணவு உண்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என தற்போதைய பிரதமர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னமே அடிமட்ட மக்கள் இரண்டு வேளை அல்லது
ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு அரைவயிற்று உணவோடு வாழ்வு போராட்டம்
நடத்துகின்றனர்.
ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு போதுமான மற்றும் போஷாக்கான உணவு கொடுக்கப்படுவதில்லை என கைதிகளே விசனம் தெரிவித்துள்ளதையும் மறக்க முடியாது. ஒரு சிலருக்கு வெளியிலிருந்து உறவுகளால் உணவு கொடுக்கப்பட்டாலும் பெரும்பாலான கைதிகளுக்கு உணவு கிடைப்பதில்லை.
கைதிகளுக்கான உணவில் போஷாக்கில்லை
அவர்கள் சிறைச்சாலை உணவையே எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போதைய நிலையில் சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா? என சிந்திக்க வைத்துள்ளது. இது உறவுகளுக்கு பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உணவு என கைதிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு போதுமான போசாக்கான உணவு கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தோன்றுகின்றது.
நாடு முழுவதிலும் 23 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சிறையில் உள்ளனர். இவர்களுக்கு ஆட்சியாளர்களால் போசாக்கான உணவு கொடுக்க முடியுமா? சிலவேளைகளில் துர்நாற்றம் வீசும் அவிந்ததும், அவியாததுமான சோற்றோடு மிளகாய்த்தூள் கலக்கப்பட்ட தண்ணீர் போன்ற கறி கைதிகளுக்குக் கொடுக்கப்படுவதாகக் கைதிகளின் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுவும் ஒரு வகை தண்டனையாகவே கைதிகள் நினைக்கின்றனர். இத்தகைய உணவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தசாப்தத்திற்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குக் கொடுப்பதால் உடல் ரீதியான பல்வேறு பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். இது அவர்களின் எதிர்கால வாழ்வையே பாதிக்கின்ற ஒன்றாகவே அமையும்.
இதனையும் திட்டமிட்ட வாழ்வு பறிக்கும் தண்டனை என்றே கூறலாம். மேலும் போஷாக்கற்ற போதுமான உணவு கொடுக்கப்படாத சூழ்நிலையில் பல்வேறு நோய்களும் அவர்களைத் தொற்றக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. இவ்வாறு கடந்த காலத்திலும் பல அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது உணவு பற்றாக்குறையோடு நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில் நீண்ட நாள் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் நோயில் தள்ளப்படுவது தண்டனையாகவே கொள்ளல் வேண்டும். அரசியல் கைதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு தண்டனை அளிக்கும் முன்னர் போதிய மற்றும் போசாக்கு தரம் குறைந்த உணவின் காரணமாக நோய்களுக்கு உட்படுவதை நீதி இடமளிக்கக்கூடாது.
ஒரு மிருகம் என்று கூட்டில் அடைத்து வைத்து போதிய உணவு கொடுப்பது குற்றமாகக் கருதப்படும் பௌத்த சிந்தனை வாதி நாட்டில் அரசியல் கைதிகள் மிருகங்களை விடப் பல வருடங்களாக அடைக்கப்பட்டு போதிய போசாக்கான உணவு கொடுக்காது என்பது கைதிகளும் மனிதர்களே எனும் கூற்றுக்கு எதிரானது மட்டுமல்ல தண்டனைக் குரிய குற்றமாகவே பார்க்கப்படல் வேண்டும்.
இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் வந்ததை
போன்று, சட்டத்தின் முன் யாவரும் சமமாக மதிக்கப்பட்டும் நாட்டின் பொருளாதார
நிலையைக் கருத்தில் கொண்டும் நீண்ட நாட்களாகச் சிறையில் வாழும் அனைத்து அரசியல்
கைதிகளும் வெளியில் செல்லக் கூடிய நிலையிலுள்ள ஏனைய கைதிகளும் அவரவர்
குடும்பத்தோடு சேர்ந்து வாழ இடமளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



