தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமைகளை வழங்குவேன்: சஜித் உறுதி
அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் பெற்றுத்தருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக ஸ்மார்ட்
வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கண்டி, கஹவடகோரலை, விவேகானந்தா
கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
அரசியல் உரிமை
எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பைப் போல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும்.
எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல், விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் பெற்றுத்தருவேன்.
மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும்போது, ஒவ்வொரு ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார்.
இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும். அடிப்படை உரிமைகள் குறித்து பேசினாலும், கொரோனா வைரஸின் போது முஸ்லிம் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகள் மீறப்பட்டன. தகனமா? அடக்கமா? என்ற விவகாரத்தில் தவறான அறிவியல் அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம் சமூகத்தினர் பாராபட்சமாக தாக்கப்பட்டனர்.
மத, கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகியுள்ளனர். எனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது போல், நானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்பேன்.” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அரசு
மேலும், பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு கட்டமாக கண்டி, செங்கடகல, பாததும்பர, கடுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,
இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து விஷவாயுகளை விசிறி படுகொலைகளை முன்னெடுத்தார். அன்று ஹிட்லர் செய்தது தவறு போலவே இன்று இஸ்ரேல் செய்து வருவதும் தவறாகும்.
இந்தத் தவறை தவறாகப் பார்க்க வேண்டும். இங்கு ஒரு நாடாக நாம் முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டு தனித் தீர்மனாத்தை எடுத்து செயற்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் அரசும் அடுத்தடுத்து இரு நாடுகளாக ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடனும் நட்புடனும் வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். இதற்கு ஆதரவாக முன்னிற்பேன்.
யார் தவறு செய்தாலும் அதைத் தவறாகப் பார்க்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்காக நான் முன்னிற்பேன். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐ.நா. பொதுச்சபை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் பயணம்
நிறைவேற்றப்பட்ட ஒஸ்லோ மற்றும் ஜெனிவா ஒப்பந்தங்கள் பல காணப்படுகின்றன. உலகத்தில் என்று இருந்தாலும் சரி, நமது நாட்டில் என்று இருந்தாலும் சரி, தீவிரவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது.
நடுத்தர பாதையிலும் சரியான பாதையிலே நாம் பயணிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் மக்கள் சார் உரிமைக்காகவும், அவர்களனது தாயகத்தின் மீதான உரிமைகளுக்காகவும் நாடாக நாம் முன்னிற்போம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்துப் பிரஜைகளும் மதவாதம், மத பேதம், இனவாதம், இன பேதங்களை நிராகரித்து ஒரு தாயின் பிள்ளைகளாக நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நமது நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் காணப்டுகின்றன. கல்வியை கட்டியெழுப்ப அரச நிதி அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அரச நிதியை மட்டும் கொண்டு பாடசாலைகளைக் கட்டியெழுப்ப முடியாது.
எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு மட்டும் இதுவரை ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
