வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? - அ.அமலநாயகி
வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான நீதி விசாரணைக்கு யார் பொறுப்பு? தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதற்காகக் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைக் காணாமல்போனவர்கள் என்று சொல்வதும், அவர்களுக்கு மரணச்சான்றிதழ், நஷ்டஈடு வழங்குதல் என்று சொல்வதும் ரணமான எம்மை மீண்டும் மீண்டும் ரணத்திற்குள்ளாக்கும் செயலாகும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாகவும், நஷ்டஈடு வழங்குவதாகவும் அண்மையில் ஜனாதிபதியால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்டே ஆக வேண்டும். முதலில் எங்கள் உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இறுதி யுத்தத்தின் போது எங்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு தற்போது எங்குள்ளார்கள் என்று தெரியாமல் இருப்பவர்கள். வீடுகள் தேடி வந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவ்வாறு பல வடிவங்களில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே ஒழிய காணாமல் போனவர்கள் அல்ல. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னரும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பலர் வீடுகளுக்கு வந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள், மேலும் பலர் தொழில் நிமித்தம் செல்லுகையில் கடத்தப்பட்டவர்கள் என பல வடிவங்களில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான ரீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கான நீதியைக் கோரிக்கொண்டிருக்கின்றோம். காணாமல் போனவர்களை நாங்கள் தேடவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனாதிபதி கூறியது போல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்டஈடு வழங்குவதாக இருந்தால் அவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது? யார் என்ன செய்தார்கள்? அவ்வாறு எமது உறவுகளுக்கு ஏதேனும் செய்தவர்களுக்கு உரிய தண்டனை என்ன? இவற்றுக்கான பொறுப்பு யாருக்கு உண்டு? போன்ற எங்கள் கேள்விகளுக்குரிய பதில் என்ன?
வெறுமனே சான்றிதழும், பணமும் எங்கள் உறவுகளுக்கு நிகராகிவிடுமா? எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலான நீதி விசாரணைக்கு யார் பொறுப்பு? தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதற்காகக் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைக் காணாமல் போனவர்கள் என்று சொல்வதும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்டஈடு வழங்குதல் என்று சொல்வதும் ரணமான எம்மை மீண்டும் மீண்டும் ரணத்திற்குள்ளாக்கும் செயலாகும்.
1990களில் இருந்து யுத்தம் முடிவுற்று அதன் பிறகும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களோ, அவர்களுக்கு என்ன ஆனது என்கின்ற விடயமோ இல்லை. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் கூட இதுவரை இல்லை.
இவ்வாறான நிலைமையிலேயே எமது உறவுகளை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். உறவுகளைத் தேடிய உறவுகளில் பலரை இன்று இழந்து தவிக்கின்றோம். தேடலிலேயே அவர்களின் உயிரையும் விட்டிருக்கின்றார்கள்.
தங்கள் இறுதி மூச்சுக்குள் தங்கள் உறவுகளை எப்படியாவது பார்த்து விடலாம், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது அறிந்துவிடலாம் என்று எத்தனையோ தாய்மார், மனைவிமார், உறவுகள் இன்னுமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு இருக்க எம்மவர்களின் வலி வேதனைகள் பலருக்கு மிக எளிதாகப் போய் விட்டது. இத்தனை வருட கால தேடலுக்கும், வலிக்கும் வெறுமனே பணம் ஈடாகிவிடாது. எம்மவர்களுக்கான உரிய நீதி வேண்டும். அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும். யார் தவறு செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டு உரியவருக்கு நீதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு நாட்டின் தலைவர் சொல்கின்றார் என்பதற்காகச் சர்வதேசம் அதனை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயங்களும் பார்க்கப்பட வேண்டும். இப்போதும் சர்வதேசத்தினால் தான் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம்.
அனைத்து விடயங்களுக்குமான சாட்சியங்கள் இருக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எமது பிரச்சனைகளின் பாரதூர தன்மையை விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வேதனை தருவதாக அமைகின்றது. உறவுகளைத் தேடும் உறவுகளின் மூச்சு அடங்கும் முன்னர் இதற்கான நீதியைச் சர்வதேசமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் பெற்றுத் தரவேண்டும்.
இல்லாவிடில் எமது சமூகம் சார்ந்த விடயத்தில் ஒருபக்கச் சார்பினை சர்வதேசம் காட்டியது என்ற அவப்பெயரையே சுமக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.