கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு - அரசாங்கம் வெளியிட்டுள்ள விபரங்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் படி அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு ஏற்ப அவருக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்படும். பல முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களி குடும்பங்களுக்கு அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசின் பாதுகாப்பில் இருக்கும் மகிந்த
முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் அரசியலமைப்பின் பிரகாரம் அரசின் பாதுகாப்பில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் கூற்றுப்படி கோட்டாபய ராஜபக்சவிற்கான பாதுகாப்புக் குழு, முந்தைய ஜனாதிபதிகளுக்காக உருவாக்கப்பட்ட அலகுகளைப் போலவே உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அச்சுறுத்தல் மதிப்பீட்டைப் பொறுத்து, காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களால் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் மதிப்பீட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு
இது குறித்து இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் கருத்து வெளியிடுகையில், அச்சுறுத்தல் மதிப்பீட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு விவரம் வழங்கப்படும் என்று கூறியதே தவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இராணுவ கமாண்டோக்கள் குழுவும், ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு (PSD) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) ஆகியவற்றின் பணியாளர்களும் பாதுகாப்பார்கள் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் போராட்டம் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறிதுடன், பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.