கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயங்களுக்குள்ளான காட்டு யானை (Photos)
புத்தளம் - எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கருகில் காட்டுப்பகுதியில் கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காட்டு யானையொன்று கடந்த 13 நாட்களாக காயங்களுக்குள்ளாகி அவஸ்தைப்பட்டு வருவதாக அப்பிரேத மக்கள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளுக்கு வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த காட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக இதன்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டு யானையைக் காப்பாற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 13 நாட்களாகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் காயங்களுக்குள்ளான காட்டு யானைக்குப் பல பகுதிகளிலும் இருந்தும் பிரதேசவாசிகள் உணவுகளைக் கொண்டு வந்து அளித்து வருகின்றனர்.
சிகிச்சையளிக்கப்பட்டு வரும் காட்டுயானை
காயங்களுக்குள்ளாகி 13 நாட்கள் கடந்தும் இதுவரை 2 தடவைகள் மாத்திரமே குறித்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறைக் காரணமாக மிருக வைத்தியர்கள் வருகை தருவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டு யானைக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தால் குணமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




