அரசியல் கைதிகளை விடுதலை செய்ய விக்னேஸ்வரன், ஜீவன் தியாகராஜா முயற்சி - நீதி அமைச்சர் தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன்
தியாகராஜா ஆகியோரின் முயற்சிகள் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை
துரிதப்படுத்துகிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (30.10.2022) யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திதித்து பேசிய விக்னேஸ்வரன்
சிறையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.
வட மாகாண ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் என்னிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கோரி இருந்தார்.
இவர்கள் இருவரினது முயற்சியும் நாட்டின் ஜனாதிபதியினுடைய ஆலோசனையும் குறுகிய காலத்தில் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உதவியது.
நாட்டினுடைய நீதி அமைச்சர் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவாக மேற்கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகிழ்ச்சி
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பில் இணைப்பாளர் முருகையா கோமகன் நீதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிப்பதற்கு சிறையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்ய உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சந்திப்பில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசனும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.