மக்களுக்கு இடையூறாக இயங்கும் கராஜ் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மக்கள் விசனம் (Video)
முறையாக அனுமதிப்பத்திரம் பெறாமல் மக்களுக்கு இடையூறாக இயங்குகின்ற கராஜினை முறையாக இயங்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என யாழ். அரசடி வீதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இயங்கும் கராஜ் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் பெய்த கனமழை காரணமாக கராஜில் இருந்து உரிய முறையில் அகற்றப்படாத கழிவு எண்ணைகள் நிலத்தடி நீருடன் கலப்பதற்கு வாய்ப்பிருந்தது.
இதனை அவதானித்த நாம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக யாழ். மாநகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு அறிவித்திருந்தோம்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் வெள்ள நீரில் மிதந்துகொண்டிருந்த கழிவு எண்ணையை நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இது இன்று நேற்று எழுந்த பிரச்சினை அல்ல. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கராஜ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உள்ளது.
கராஜிற்கு அருகில் யாழ். இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, பிரபல தனியார் கல்வி நிறுவனம் மற்றும் மக்களது குடியிருப்புகள் என்பன உள்ளன.
ஆகவே இந்த கழிவு எண்ணையும் அங்கிருந்து வெளியேற்றப்படும் அலுமினியம் மற்றும் இரும்புத் துகள்களும் சூழலுடன் இணைந்து பல்வேறு நோய்களை உண்டாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.
அத்துடன் கராஜில் வேலை செய்யும் போது ஏற்படும் சத்தமானது இப்பகுதியில் இருக்க வேண்டிய சத்தத்தின் அளவிற்கு மேலாக இருப்பதாக, இங்கு வந்த அதிகாரிகள் கணித்துக் கூறினர்.
பொதுமக்களான நாம் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை, கடந்த 2015.01.21 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தோம்.
அத்துடன் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை நிர்வாகத்தினரும் கடந்த 2015.08.03 அன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்திற்கும் அனுப்பியிருந்தனர்.
நாங்கள் அனுப்புகின்ற கடிதங்கள் நியாயபூர்வமானது என அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றார்கள் ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்குகிறார்கள்.
கராஜினை இயக்குபவர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் சூழல் அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படுதல் மறுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிரான மேன்முறையீடு ஒன்றினை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு வழங்கியிருந்தார்.
அந்த மேன்முறையீடானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்கவினால் கடந்த 2016ஆம் ஆண்டு 10ஆம் மாதம் நிராகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு எழுந்த பிரச்சினை காரணமாக நாங்கள் மீண்டும் கடந்த 11.11.2021 அன்று வடக்கு மாகாண ஆளுநருக்கு ஒரு கடிதம் வழங்கினோம், அதற்கான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
நாங்கள் கராஜினை இயக்க வேண்டாம் என்று கூறவில்லை, உரிய முறையில் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு அதனை இயக்குமாறுதான் கூறுகின்றோம்.
அறிவித்தல் வழங்கவேண்டிய அத்தனை அதிகாரிகளுக்கும் அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காததால் எமது பிரச்சினைகளை எந்தவிதத்தில் தீர்ப்பது என்றும், எமது ஊர் மக்களையும், பாடசாலை மாணவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவோம் என்றும் தெரியாத நிலையில் ஊடகங்களது உதவியை நாடியுள்ளோம். இதன் மூலமாவது எமக்கான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.


