ஊடகவியலாளரை தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்யாதது ஏன்? தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய நபரை ஏறாவூர் பொலிஸார் இதுவரை கைது செய்யாதது ஏன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களின் பணிக்கும், சுதந்திரமான செயற்பாட்டிற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், விசாரணைகள், மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் ஏறாவூர் பொலிஸார் சில ஊழல் அதிகாரிகளின் பொய்யான முறைப்பாடுகளை வைத்துக்கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் மீது பொய் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதேபோல் கடந்த 26ம் திகதி ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் பிரதீபன் மீது அரச ஆதரவு நபர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் மிக மோசமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊடகவியலாளர் தன்னை தாக்கியவர்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய நபரை ஏறாவூர் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை.
ஊடகவியலாளரை தாக்கிய நபரை ஏறாவூர் பொலிஸார் இதுவரை கைது செய்யாதது ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் ஊடகவியலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே ஊடகவியலாளரை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தண்டனை பெற்றுக் கொடுக்க பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



