மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசு எமக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதன் காரணம் என்ன? கலாறஞ்சினி
மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதற்குக் காரணம் என்ன? என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பின் இணைப்பாளர் கலாறஞ்சினி கேள்வி எழுப்பியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலிசப்ரி முன்வைத்திருந்த விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுடைய உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 49ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது குடும்பங்களிற்கு வாழ்வாதாரமாக ஒரு லட்சம் ரூபா கொடுக்கப் போகிறதாக நானும் அறிந்தேன்.
ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் தன்னையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்ற போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பதற்குக் காரணம் என்ன? என்பது எங்களுக்கு ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது.
கொடூர யுத்தமும், இன அழிப்பும் நடைபெற்றதன் பிற்பாடு ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற முடியாது இருக்கிறது. 2016ஆம் ஆண்டு காணாமல் போன உறவுகளுக்கான அலுவலகம் ஒன்றைத் திறந்து அதனூடாக நான்கு பொறிமுறைகளை உருவாக்குகின்றோம். அதனூடாக தீர்வுகள் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்கள்.
இப்போது 2022 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இற்றைவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதில் கூற அரசால் முடியவில்லை. குறுகிய கால நாட்களுக்குள் நீதி அமைச்சர் காணாமல் போன உறவுகளுக்கு இழப்பீடும், மரணசான்றிதழும் தருவதற்காகவே வடக்கிற்கு வருகை தந்திருந்தார்.
ஒருசிலருக்குச் சொத்து இழப்பெனக் கூறி ஒரு லட்சம் ரூபாவினை வழங்கியிருக்கின்றார். ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திலிருந்து கொண்டு தங்களுடைய உறவுகளைத் தேடுகின்ற குடும்பங்கள் ஒருபோதும் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியாமல் இழப்பீடுகளோ, வாழ்வாதாரங்களோ எதையுமே எதிர்பார்க்க மாட்டார்கள். வாங்கப்போவதும் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குச் சான்றிதழையும், இழப்பீட்டையும் எப்படியாவது வழங்கி இப் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்து, போராட்டத்தை இல்லாது செய்து காணாமல்போன உறவுகளைத் தேடுகின்ற அமைப்புக்களையும் இல்லாது செய்து, இக் குடும்பங்களை நிர்க்கதியாக்கி யுத்தத்திலே யாரையுமே கொல்லவில்லை என்பதனை உலகிற்குக் காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முனைந்திருக்கின்றது.
ஆனால் அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்று எரிபொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களைப் பெறமுடியாத நிலை. வடபகுதி, தென்பகுதி மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள்.
அதனை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதற்குக்
காரணம் என்ன?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் இதனை
ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam