இலங்கைக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? கலந்துரையாடும் நாணய நிதியத்தின் அதிகாரிகள்
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் நாட்டுக்கு இந்த ஏற்பட ஏதுவாக அமைந்த காரணங்கள் பற்றியும் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள அறிக்கை சம்பந்தமாக நிதியத்தின் பணிப்பாளர் சபை கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிரமம், சர்வதேச தரப்படுத்தல், கடன் தொடர்பான தரப்படுத்தலில் இலங்கை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை உட்பட பல விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாணய நிதியம் கடந்த டிசம்பரம் மாதம் இலங்கையில் காணப்பட்ட பொருளாதர நிலைமை தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு ஆய்வின் பின்னர், இந்த அறிக்கை தயாரித்துள்ளது.
இதனிடையே இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு விஜயம் செய்து, அதன் பிரதான அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு, அந்நிய செலாவணி தட்டுப்பாடு ஆகியவற்றை தீர்க்க, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது சிறந்தது என பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
எனினும் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர்த்து வந்ததுடன் வெளிநாடுகளிடம் இருந்து கைமாற்று கடனாக அந்நிய செலாவணியை பெற்று வந்தது. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலைமையில், அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாட முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்கம் ஆரம்பத்திலேயே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருக்க வேண்டும் எனவும் தற்போது கால தாமதமாகி விட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ச டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
இறுதி நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றாலும் கிடைக்கக் கூடிய பலன் சொற்பமாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.