நிதியமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்:சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்க போவது யார்?
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்று வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை 11 ஆம் திகதி சந்திக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிதியமைச்சராக பதவி வகித்து வந்த பசில் ராஜபக்ச கடந்த 3 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய நிதியமைச்சராக அலி சப்றி நியமிக்கப்பட்டதுடன் அவரும் இன்று அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ராலும் நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் அதன் பின்னர் உலக வங்கியின் பிரதிநிதிகளையும் சந்திக்க பசில் ராஜபக்ச முன்னர் திட்டமிட்டிருந்தார். நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் அவருடன் செல்விருந்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவது மேலும் தாமதமாகும் எனில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து நிதியமைச்சர், அமை்ச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான திட்டத்திற்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் அரச அதிகாரிகள் மட்டத்திலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படலாம் என பேசப்படுகிறது.