ரணிலின் அதிரடியின் பின்னணியிலுள்ள ரகசியம் - இலக்கு வைக்கப்படுவது யார்...!
சமகாலத்தில் தென்னிலங்கையில் அரசாங்கத்தின் அதிரடியான செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் எதிர்பாராத ஒன்றாக உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடல் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்தி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் போராட்டம்
எனினும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதும் அதிரடிகள் ஆரம்பமானது. பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் பலர் கைது செய்யும் வகையில் தேடப்பட்டு வருகின்றனர்.
ஊழல்மிக்க ஆட்சியாளர்களான ராஜபக்சர்களை விரட்டுவதற்காக சாதாரண பொதுமக்கள் காலிமுகத்திடல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதில் கொழும்பு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களும் பேதங்களை மறந்து ஒன்றாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
எனினும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னர் மக்கள் போராட்டம் அரசியல் கட்சி ஒன்றின் போராட்டமாக மாற்றம் பெற்றது.
ஜே.வி.பியின் வன்முறை
மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் விடுதலை முன்னணி எனும் ஜே.வி.பியினர் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றினர். 71 அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது முதல் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் வரையில் அவர்களின் செயற்பாடு காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பியின் பல வன்முறையாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை ரணில் அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை என அரசாங்க கட்டங்களை முற்றுகையிட்டதுடன் அங்கு வன்முறை சம்பவங்களையும் அவர்கள் அரங்கேற்றியதாக புலனாய்வு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
400 பேரை கைது செய்ய நடவடிக்கை
இந்த குற்றச்சாட்டின் கீழ் சுமார் 400 பேரை கைது செய்யும் நடவடிக்கையை பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது ஜனநாயக ரீதியில் மக்கள் போராடும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக பொது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அதனையும் மீறி வன்முறையான வகையில் எந்த தரப்பினர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாராவது அரசாங்க கட்டடம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் கூட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிரான கலவரம்
தற்போது வரையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்கள். இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் அனுமதித்தால் இலங்கையில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பினரின் வெறியாட்டத்தால் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் கொழும்பில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.