இந்திய தனிமனித வருவாயின் முக்கிய புள்ளியின் இழப்பு
இந்தியாவின் தனிமனித வருவாய் ஈட்டலில் முக்கிய பங்காற்றி வந்த தொழிலதிபர்களி்ல் ஒருவரான ரத்தன் டாடா காலமான செய்தி சர்வதேச ரீதியில் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, தனது 86ஆவது வயதில் உடல் நல குறைவால் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார்.
உலகின் பல பகுதிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் டாடா வாகனங்கள், ஆடைகள் மற்றும் தேநீர் போன்ற பல்தரப்பட்ட உற்பத்திகளை டாடா நிறுவனம் வழங்கி வருகின்ற நிலையில், டாடா குழுமத்தின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றில் ரத்தன் டாடா பாரிய பங்காற்றியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ரத்தன் டாடா 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், ஒக்டோபர் 2016 முதல் பெப்ரவரி 2017 வரை இடைக்காலத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி அன்று, சூரத்தில் பிறந்து பின்னர் டாடா குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட நோவல் டாடாவிற்கு மகனாக ரத்தன் டாடா பிறந்தார்.
தாய் சோனு டாடா மற்றும், தந்தை நோவல் டாடாற்கும் இடையிலான பிரச்சினைகள் காரணமாக தனது இளம் பருவத்தில் பெரும் நெருக்கடிகளையும் மனஉளைச்சல்களையும் ரத்தன் டாடா எதிர்நோக்கியுள்ளார்.
இந்நிலையில், பெற்றோரின் பிரிவிற்கு பின்னர் தனது பாட்டியின் வளர்ப்பில் இருந்த ரத்தன் மும்பை மற்றும், சிமலாவில் தனது பள்ளி படிப்பினை நிறைவு செய்துள்ளார்.
கல்லூரி படிப்பில் கட்டிட நிர்மான துறையில் ஈடுபட ஆர்வம் காட்டியிருந்த போதும் தமது குடும்ப வணிகத்தினை மேம்படுத்துவதற்காக நோவல் டாடா வழங்கிய வலியுறுத்தலின் பேரில் அவர் பொறியியல் தொழில்நுட்பத்தில் தனது உயர் கல்வியை தொடர்ந்துள்ளார்.
கல்வி நடவடிக்கைகள்
இருப்பினும் அவர் தனது, பாட்டியின் உதவியுடன் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிட நிர்மான துறையில் கல்வியை தொடர்வதற்காக சேர்ந்து 1959 இல் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டத்தினை பெற்றுள்ளார்.
அதேவேளை, அந்த சமயத்தில் ரத்தன் டாடாவிற்கு 1961ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளது, இதற்கிடையில், இந்தியாவில் இயங்கி வந்த டாடா குழுமம் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்துள்ள நிலையில், அப்போது டாடா குழுமத்திற்கு தலைவராக இருந்த ஜேஆர்டி டாடாவிற்கு நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இக்கட்டான நிலையை எதிர் கொள்ள இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் ஆறுமாத காலம் சாதாரண பயிற்சியாளராக இருந்துள்ளார்.
மிகவும் அடிமட்ட தரத்தில் இருந்து தொழிலை கற்ற ரத்தன், பல நெருக்கடிகளையும் சாவல்களையும் எதிர்நோக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பாரம்பரியமாகவும் இந்தியாவின் முன்னோடி வணிக நிறுவனமாகவும் இயங்கி வரும் டாடா குழுமத்தில் 1970களில் ரத்தன் டாடாவுக்கு மேலாளர் பதவி வழங்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி
மேலும், 2008ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது பெற்ற பிறகு, இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதையும் பெற்றுக்ககொண்டார்.
பல வருட பங்காற்றலின் மத்தியில் ரத்தன் டாடாவின் பதவிக்காலத்தில் அதிக அளவில் செயற்பட்டு வந்த பல்வேறு துணை நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து டாடா கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக, அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பல கொள்கைகளை கொண்ட யுத்தியை டாடா செயல்படுத்தியது.
இதில் ஓய்வு பெறும் வயதை நடைமுறைபடுத்தல், துணை நிறுவனங்களை நேரடியாக குழு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் துணை நிறுவனங்கள் தங்கள் லாபத்தை டாடா குழும பிராண்டை உருவாக்குவதற்கு பங்களிக்க வேண்டும் போன்ற கட்டளைகளை பிறப்பித்தது.
அதேவேளை, டாடா நிறுவனம், புதுமைகளுக்கு முன்னுரிமை அளித்ததுடன், இளைஞர்களில் திறமையாளர்களுக்கு பல பொறுப்புகளை வழங்குதல் போன்ற திட்டங்களை அதிகரித்தது.
இவ்வாறிருக்கையில், ரத்தனின் தலைமையில், நிறுவனம் இயங்கி கொண்டிருந்த போது, அந்நிறுவனத்தின் விற்பனையானது பொருட்களின் விலையையும் தாண்டி அதன் ப்ராண்ட் அதாவது, நிறுவனத்தின் அடையாளத்திற்காக அதிகம் விற்பனையாக தொடங்கியது.
சுமார் 21 ஆண்டுகள் டாடா குழும தலைவர் பதவியில் இருந்து 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர் அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தார்.
உடல் நலக்குறைவு
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் வரலாற்றை பதிவுசெய்த தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷன், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய பட்டங்களை பெற்றவர்.
அத்துடன், உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் கொண்ட பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் என்பதுடன், இந்தியாவின் தனிமனித வருவாய் ஈட்டலில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்தன் டாடா உடல் நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
சர்வதேச ரீதியில் குறிப்பாக வளர்ந்து வரும் இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடாவின் மரணமானது சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போதைய சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வந்த அவரின் இழப்பு இந்தியாவின் பொருளாதாரத்திலும் டாடா குழுமத்தின் வளர்ச்சியிலும் ஒரு பெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |