பொத்துவில் - பொலிகண்டி பேரணியின் உண்மையான சொந்தக்காரர்கள் யார்? முக்கிய தகவலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
எதிர்காலத்திலும் நாம் பொதுமக்களாகக் களத்தில் குதிக்கின்ற போது சட்டத்தால் அதைத் தடுக்க முடியாது என தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கேள்வி - பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் பேரணிக்கு பொலிஸார் நீதிமன்றில் தடையுத்தரவு பெற்று பேரணியை நிறுத்த முனைந்தமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? பதில் - தமது உரிமைகளுக்காக மக்கள் களத்தில் இறங்கிப் போராடுகின்றார்கள் என்றால் அதைத் தடுக்கச் சட்டத்தில் இடமில்லை. அதற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறவும் முடியாது.
ஏனெனில் அது மக்களுக்கான மக்களின் போராட்டம். உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் போராட்டம் ஆரம்பித்தால் அது சிறுகச்சிறுகத் திரட்சி பெற்று உத்வேகங் கொண்டு இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கும் அராசாங்கமோ அரசோ அதை அவ்வளவு எளிதில் அடக்கிவிட முடியாது அடக்க நினைத்தாலும் அது வீரியம் பெற்றுக் கொண்டே ஓங்கிச் செல்லும். ஏனெனில் அது மக்களின் போராட்டம் அது அவ்வளவு எளிதில் வீரியமிழக்காது.
மக்களின் போராட்டத்தில் அரசியல் சாயம் கலக்கும்போது அது சிக்கலுக்குரியதாகி விடுகின்றது. மக்கள் போராட்டத்தில் அரசியவாதிகள் தமது அரசியல் சாயத்தோடு கலந்துவிட முயற்சிக்கும் போது அது மக்கள் போராட்டத்தை மழுங்கடித்துவிட முனையும்.
அதனால்தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்படும். குறிப்பிட்ட போராட்டத்தில் பெறப்பட்ட அத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகளும் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே பெறப்பட்டதன்றி மக்களுக்கு எதிராகப் பெறப்படவில்லை.
இது நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான புள்ளி. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டத்தில் குழப்பம் விளைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுவதில்லை ஆனால் தனி நபர்கள் தனிஅமைப்புகள் கட்சிகள் என்று வரும்போது குழப்பம் விளைவதால் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதே சட்டத்தின் பார்வையின் முன் இருக்கின்ற விடயம்.
எனவே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 'தனிநபர்கள்' மக்கள் பெயரால் எதையோ அடைய நினைக்கின்றார்கள் என்பதுதான் தெளிவானது. தனிநபர்கள் தமக்கான சுயநல எதிர்பார்ப்புகளைக் களைந்துவிட்டுமக்களோடுமக்களாகி நிற்கன்ற போது அதன்அர்த்தம்வேறுபடும். மக்களை வைத்து தனிநபர்கள் லாபம் தேட முனைகின்ற போது அதன் விளைவுகள் வேறானவை.
பொலிஸார் இந்த இடைவெளிக்குள் நின்றுதான் தடையுத்தரவு பெற முயற்சிப்பார்கள். அதைத்தான் செய்துமிருக்கின்றார்கள். எதிர்காலத்திலும் நாம் பொதுமக்களாகக் களத்தில் குதிக்கின்ற போது சட்டத்தால் அதைத் தடுக்க முடியாது. கேள்வி - அரசியல்வாதிகள் மக்களுக்காகச் செயற்படுதல் அவசியம்தானே? பதில் - நாடாளுமன்ற உறுப்பிநர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படயில் அவர்கள் மக்கள் போராட்டத்தில் தாமாகக் கலந்து கொள்வது சிக்கலுக்குரியதல்ல.
மக்கள் போராட்டமொன்றுக்கு அவர்களைத் தனியாக அழைக்க வேண்டியதில்லை தமது மக்களுக்காக அவர்கள் எப்போதும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
மக்களாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் முந்நிலையோடு அதை நகர்த்தி சமயத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் அதை நடைமுறைச் சாத்தியப்படுத்திய போது அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது சுய அரசியல் நலவுகளுக்கான எதிர்பார்ப்புகளை தூக்கியெறிந்துவிட்டு அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காமலும் மக்கள் போராட்டத்துக்கு அரசியல் சாயம் அடிக்காமலும் அதில் பங்கு பற்றியிருக்க வேண்டும்.
அதைத் திட்டமிட்டுக் கொள்வதில் அல்லது ஒழுங்கைத் தீர்மானித்துக் கொள்வதில் தப்பே இல்லை. ஆனால் அந்த ஒழுங்கு ஒரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை அடையாளமாக்கிட வேண்டும் என்ற ஆசை வந்ததன் விளைவு அது. தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தை அரசியல் ரீதியில் முன்னெடுப்பதாகத் தெளிவாக அறிவித்துவிட்டு களமிறங்கிச் செயற்படுதல் என்பது வரவேற்கத்தக்கது.
அதில் 'மக்கள் சிவில் சமூக அமைப்புகள்' என்ற திரைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு அறிக்கைவிட வேண்டிய அவசியமிருக்காது. தைரியமாக தாங்கள்தான் இப்போராட்டத்தின் பங்காளர்கள் என்று மார்தட்டிச் சொல்ல முடியும். அரசியல் வேடிக்கை வித்தைகாட்டவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. எனவேதான் மக்களுக்காகக் களமிறங்கும் அரசியல்வாதிகள் தமது பொறுப்பறிந்து செயற்படத் தயாராக இருக்க வேண்டும்.
மக்களுக்காகச் செயற்படுதல் என்பதை தேர்தலுக்கான முதலீடாகவோ அல்லது அரசியல் விளம்பரமாகவோ ஆக்கிக் கொள்ள முனைவதுதான் தவறானது. தேர்தல் அரசியலை முன்னிறுத்தி அரசியல்வாதியொருவர் தனது இமேஜைக் கட்டமைக்க விரும்பினால் அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. மக்கள் போராட்டத்தை அதற்குப் பயன்படுத்துவதுதான் பொறுத்தமற்றது.
கேள்வி - பொலிகண்டியில் அரசியல் பிரமுகர்களுக்கிடையே முரண்பாடு தோற்றம் பெற்றதாக வரும் செய்திக் குறித்து உங்களின் அபிப்ராயம் என்ன? பதில் - மக்கள் போராட்டமொன்றில் அரசியல் கணக்குப் பார்க்கும் நேரமல்ல அது.
மக்களுக்காக களமிறங்கினால் அந்தப் பணியைச் செய்ய அரசியல் பிரமுகர்கள் தெளிவான உறுதியுடன் இருக்க வேண்டும். முரண்பாடு எப்போது தோற்றம் பெறுமென்றால் யார் பெரிய ஆள் என்ற கேள்வி தோன்றும் போதுதான்.
பொலிகண்டியிலும் அதுதான் நடந்திருக்கின்றது. தன்னைப் பெரியாளாக்கிக் காட்டத் தனிநபர்கள் முயல்கின்றபோது அது அவரவர் கட்சி அரசியல் சார்ந்த பிரச்சினையாக அது மாறிவிடுகின்றது. அதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
ஏனெனில் அது மக்களால் வடிவமைக்கப் பட்ட போராட்டம் அதில் அரசியல் லாபம் தேட முனைவது சிறுபிள்ளைத் தனமானது. கேள்வி - சுமந்திரன் கடைசியில் முரண்பாட்டைவெளிப்படுத்திய விதம் பற்றி? பதில் - 'இடையில் வந்தவர்கள் இடையில் போய்விட்டார்கள்.
இதை பொத்துவில்லில் ஆரம்பித்தவர்கள் இதோ இங்கேதான் இருக்கின்றார்கள். இதுதான் பொலிகண்டி, பொலிகண்டி என்று சொல்லிக் கொண்டு ஒரு பகுதியினர் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இந்த முரண்பாடுகளை நாம் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது.
நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் என்ற செய்தியைத்தான் நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும், நமக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அரசாங்கத்துக்குப் போய்ச் சேரக்கூடாது' அதுதான் சுமந்திரனின் பேச்சின் சாரம்.
முரண்பாடுகளும் உள்ளகக் குழப்பங்களும் இருந்தன என்பதை அவரது வார்த்தைகளே உணர்த்தின. நமக்குள் ஒற்றுமையில்லை என்ற செய்தி வெளியில் சென்றுவிடக் கூடாது பொது வெளியில் பகிரங்கமாக அவர் கூறுகின்றார். அதாவது பிளவுபட்டிருக்கின்றோம் என்ற செய்தியை தெளிவாக அவர் பிரகடனப்படுத்துகின்றார்.
அந்தப் பிரகடனப்படுத்தலில் அவர்கொஞ்சம் கூட சஞ்சலப்பட்டதாகவோ வேதனைப்பட்டதாகவோ தெரியவில்லை. மிகுந்த அவதானத்துடன் எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்கத் தக்கதாக சமூகவலைத்தள நேரடி ஒளிபரப்பில் இப்படிப் பேசுகின்றார் என்றால் இவர் எவ்வளவு புத்திசாலி என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இதே புத்திசாலித்தனத்தை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுப் பெறப்பட்ட விசேட அதிரடிப்படையினரால் வழங்கப்பட்ட அவரது பாதுகாப்பு விடயத்திலும் அவரே தெளிவுபடுத்திவிட்டார். சுமந்திரன் அப்படிச் செய்திருக்கக் கூடாது.
தனிநபர்கள்பங்குபோட்டுக்கொள்ளவும் கீர்த்தி பெற்றுக் கொள்ளவும் இது அந்தப்பேரணியைப் பயன்படுத்தியிருக்க கூடாது. அதுதான் மக்களின் அர்ப்பணிப்புக்கு அளிக்கப்படும் கௌரவமாகும்.
அந்தக் கௌரவத்தை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாதுதானே கேள்வி - மக்களுக்கு இதில் தெளிவுள்ளதா? பதில் - உண்மைள் நிரூபனமாக சில மாயத் தோற்றங்கள் தானாக விலகும் அதுதான் இப்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணத்தின் விளைவாக 'தெளிவான மார்கெட்டிங் ஸ்டடெஜி' அவதானிப்பாளர்களுக்கு புலப்பட்டது.
தமிழர்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைக்குரிய இறுதித் தேர்வாகவும் தானே இருப்பதாக நிறுவ எடுக்கப்பட்ட முயற்சிகள் அப்பட்டமாக வெளிப்பட்ட நிகழ்வாகவும் பி2பி திகழ்ந்துவிட்டது.
இப்போதைக்கு கட்சியின் தலைமைத்துவக் கதிரையைத் தவிர வேறு எதுவுமே சுமந்திரன் போன்றவர்களின் கண்களுக்குச் சமகாலத்தில் புலப்படமாட்டாது. நடை பயணமும் அந்த நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. எனவே சீக்கரமாகவே மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்.
கேள்வி - 'கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் யாராலும் செய்ய முடியாத விடயத்தை நாங்கள் இப்போது செய்து காட்டி யிருக்கின்றோம்' என்று பிரஸதாபிக்கப்பட்ட விடயம் தொடர்பில் உங்களது கருத்து என்ன? பதில் - 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததோடு அடுத்து வந்த மூன்று வருடங்கள் முகாம் வாழ்க்கைக்குள் இருந்து மக்கள் சிறுக்சிறுக விடுபட்டுத் தத்தமது வாழ்க்கையை மீளவும் ஆரம்பிக்கத் தொடங்கி நம்பிக்கையோடு நடை பயிலத் தொடங்கினார்கள்.
வாழ்வாதாரத்தேவை, வீட்டுமனை, உணவு, உடை, தொழில் என்று எல்லாத் தேவைகளுக்கும் யாரிலாவது தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தோடு தான் அவர்கள் காலத்தை எதிர்கொண்டார்கள்.
வாழ்க்கை அவர்களுக்கு நெருக்கடிகளைப் பல்வேறு கோணங்களில் வழங்கிக் கொண்டே இருந்தது. அதே நெருக்கடிகளோடு மீகுதி ஒன்பது வருடங்களையும் அவர்கள் தாண்டி வந்திருக்கின்றார்கள்.
இக்காலப் பகுதியில் அரசியல் லாபம் தேட மக்கள் எழுச்சியைப் பயன்படுத்திட முனைகின்ற நபர்கள் எங்கிருந்தார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த தேர்தல் வரை இத்தகையவர்களுடைய பெயர் தமிழரசுக்கட்சியிலோ அல்லது வேறு அரசியல்கட்சி சார்செயற்பாடுகளின் போதோ இருப்புக் கொண்டிராத போது, இந்தப் பன்னிரெண்டு வருட காலத்தில் இருந்திராத அக்கறை இப்போது திடீரென்டு எங்கிருந்து வந்தது? அதுவும் கொரோனா என்ற தொற்று வியாதி அச்சுறுத்திக் கொண்டு கட்டாய சமூக இடைவெளியையும் மக்கள் கலப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானமிகுந்த இன்றைய நாட்களில் கோமாவில் இருந்து விழித்துக் கொண்டது போன்று வெறும் கோசங்களை மட்டும் சுமந்து கொண்டு வீதிக்குவரத் தோன்றியது எப்படி? சமூகவலைத்தளங்களில் பல்லாயிரம் வீரர்கள் இருக்கின்றார்கள் தமது ஸ்மார்ட் போனில் கவரேஜூம் சார்ஜூம் இருக்கும் போது தமது டேட்டா தீரும் வரைப் போராடுவார்கள். அவர்களின் போராட்டத் திறன் அந்தத் தொடு திரைகளுக்குள் மட்டுமே முடங்கியிருக்கும்.
இத்தகைய போராளிகளின் போராட்ட வீரியம் தானும் ஓராள் இங்கு இருக்கின்றேன் என்பதை அடையாளப்படுத்துவதைத் தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.
அத்தகைய போராட்ட வீரர்களின் உச்சவெளிப்பாடு நிகழ்வுகளை நேரடி அஞ்சல் செய்வது. அதாவது 'பேஷ்புக் லைவ்' கொடுப்பது அது அவர்களுக்குப் பதக்கம் கிடைப்பதற்குச் சமமானது அங்கு எத்தனை கே விவ்ஸ் எத்தனை கே லைக்ஸ் எத்தனை கொமன்ட்ஸ் எத்தனை செயார்ஸ் என்பதை அவதானித்தே இன்புற்றுநிற்கும் சுய இன்ப நிலை. அதைத் தாண்டி அங்கு ஒன்றுமே இல்லை.
இப்படிப்பட்ட நிலைக்குள் பல்வேறு சேதிகளை பி2பி நடைபவனி அடையாளங் காட்டிச் சென்றது. தமக்கு முன்னுள்ள மற்றைய தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் குற்றஞ்சொல்லி அவர்கள் தலைமைத்துவத்துக்கு அருகதையற்றவர்கள் என்ற கருத்தினை மக்கள் மனதில் பதிப்பது மட்டுமே அந்த வார்த்தைகளுக்குள் பதுங்கியிருந்த விடயம்.
அதை யாரைத் திருப்திப்படுத்த செய்தார். அதற்குப் பின்னால் மறைந்திருந்த எதிர்பார்ப்பின் இலக்கு என்ன? தமிழ்மக்களின் அடுத்த தலைமைத்துவ ஆளுமை தாமே என்பதை நிறுவிக்கொள்ள முனைவதா அல்லது இதுவரை இருந்த தலைவர்களுக்குப் பின்னால் செல்வதில் உங்களுக்கு எதுவுமே கிடைப்பதற்கில்லை இனி இதோ நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக வீதியில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இறங்குவோம்.
எனவே நாங்கள் தலைமையாக இருந்து வழிநடாத்தச் சரியானவர்கள் எனவே எங்களைச் சார்ந்த இங்குள்ளவர்களை மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதைத்தான் கடந்த பன்னிரெண்டு வருடங்களும் உங்களுக்குப் போதிக்கத் தவறின இப்போது அதை நாங்கள் தெளிவு படுத்திவிட்டோம். ஏனெனில் தமிழ் பேசும் மக்களுக்கே தலைமைத்துவத்தை வழங்கும் ஆற்றல் எங்களுக்கு வந்துவிட்டது, முகநூலில் பார்த்திருப்பீர்கள். என்பதுதான் சொல்ல வரும் செய்தியாக அமைந்துவிட்டது.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கடந்த பன்னிரெண்டு வருங்கள் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு தேர்தல்களை எதிர்கொண்டார்கள் அப்போதெல்லாம் தாம் நம்பியவர்கள் கைகாட்டிய பக்கம் வாக்களித்துவிட்டுக் கடந்துசெல்லப் பழகியிருந்தார்கள். ஆக இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளும் மக்கள் துன்பத்தோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.
தேர்தல் செயற்பாட்டாளர்கள் மக்கள் உரிமைகளைப் பேசி தமது வெற்றியைப் பெற்று தாமே நிலைபெற்றார்கள். மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களின் மீதுள்ள நேசத்தில் இன்னும் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் அதனடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலும் யுத்தம் முடிந்து ஆறாவது ஆண்டிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விடிவைத் தரவல்ல சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதற்குள்ளும் தெளிவான சுயநல அரசியல் சூட்சுமங்களைக் கைக்கொண்டதன் விளைவு தோற்றுப் போனது மக்கள்மட்டுமே.
அப்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை, மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம் இருந்தது, எங்கிருந்து எங்கும் நடமாடும் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம், கூட்டமாகச் செயற்படும் சுதந்திரம் எல்லாமே இருந்தன. அரசியல் ரீதியில் மக்களின் வாக்குப் பலம்பெற்ற நபர்கள் குறிப்பிட்ட அணி அல்லது வட்டத்துக்குள்ளேயே இருந்தார்கள். இப்போது தொண்டை கிழியக் கத்திவிட்டு கடந்து போகின்ற விடயங்களை அப்போது நுனி நாக்கினாலேயே பேசி தீர்வுபெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
ஆனால் எதுவும் நடக்கவில்லையே இப்போது கத்திக்கத்தித் தொண்டை கட்டிக்கொண்டதே தவிர வேறு எந்தஅடைவுமில்லை. அந்த நான்கு வருடங்களையும் வீணாகக் கதைத்துக் கடத்திவிட்டு இப்போது எந்த இலக்கை நோக்கி நகர்கின்றார்கள் என்பதை மக்கள் குறிப்பறிந்து விளங்கிக்கொள்ளாவிட்டாலும் சிந்திக்கும் திறன்கொண்ட நபர்களும் நகழ்வுகளின் பின்னணியை ஆய்வு செய்கின்ற நபர்களும் விளங்கிக் கொள்ளமல் இருப்பார்களா.
எனவே யாருடைய தேவைக்காக அந்தப் பன்னிரெண்டு வருடங்களை இழுத்தார்கள் என்பது பற்றி மேலும் விரிவாக ஆராயத் தேவையில்லை. அதில் பயனுமில்லை. கேள்வி - உண்மையிலேயே இந்தப் பேரணியின் சொந்தக்காரர்கள் யார்? பதில் - மக்கள்தான் சொந்தக்காரர்கள்.
பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் என்னென்னசெய்வதென்று தெளிவாக சிவில் சமூகப் பிதிநிதிகளால் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அரசியல் கட்சியல் தமது ஆதரவைத் தருவதாக வாக்களிக்கப்பட்டது.
பேரணியின் போக்கைத் குறிப்பிட்ட சிலர் திசைதிருப்பிடாமல் இருந்திருந்தால் அந்த ஆதரவை அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி வழங்கியிருக்கும் பொலிகண்டியில் நினைவுக்கல் நாட்டும் நிகழ்வோ அல்லது பேரணியில் அரசியல்வாதிகளுக்கு மாலைபோட்டு அவர்களைத் தனித்துவப் படுத்திக் காட்டும் திட்டங்களோ இருக்கவில்லை. ஆனால் திடீரென்று நினைவுக்கல் முளைத்து அது காணாமலும் போய் இருந்தது.
ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை சிறுநொடியில் நகைச்சுவையாக்கிடும் காரியம் நினைவுக்கல் விடயத்தில் இடம்பெற்றபோது துயரப்பட்டது மக்களுக்கான உண்மையான குரலின் சொந்தங்கள்தான். கட்சிஅரசியல் போட்டிக்குள் அல்லது நிலைநிறுத்தலுக்குள் இந்தப் போராட்டத்தை அடகுவைக்க எடுக்கப்பட்ட முயற்சி கண்டிக்கத்தக்கது.
மக்களின் விருப்பின் பேரில் அப்படியே அதை விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக வெற்றி பெற்ற ஒரு மக்கள்போராட்டமாக இருக்கும். கேள்வி - உள்வாங்கி அழித்தல்செயற்பாட்டுக்குப் பலியாகமல் மக்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று ஓரிடத்தில் சொல்லி இருந்தீர்கள் அது என்ன உள்வாங்கி அழித்தல் செயற்பாடு? பதில் - 2002ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களால் முஹர்ரம் எழுச்சி என்ற பெயரில் மக்களின் அரசியல் விழிப்புப் போராட்டமொன்று வடிவமைக்கப்பட்டது.
முஸ்லிம் மக்களின்அரசியல் முகவரியாய் இருந்த தலைவர் அஷ்ரப் மரணித்து சிறிது காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் நிகழ்ந்தால் பலரின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். நேரடியாக அதை எதிர்த்து அழித்துவிடாமல் பக்குவமாகக் கையாள வகுக்கப்பட்ட திட்டந்தான் 'உள்வாங்கி அழித்தல்' அப்போதைய அரசியல் தலைமை மாணவர்களுக்கு வஞ்சகமாக ஆசை வார்த்தைகளையூட்டி நாங்களும் உங்களோடு இருப்போம். நீங்கள்ஏன் தனியாகச் செய்யப்போகின்றீர்கள்! நாங்களும் உங்களுடன்சேர்ந்து வருகின்றோம்.
எல்லாரும் சேர்ந்தே செய்வோம் என்று மாணவர்களை உள்வாங்கி இறுதியில் அவர்கள் திட்டமிட்டிருந்த அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. மாணவர்களின் போராட்டம் அப்படியே நீர்த்துப் போனது முஸ்லிம் அரசியலில் எவ்வித மாற்றமும் நிகழும் வாய்ப்பே குறைந்து போனது.
அதே பாணியிலான உள்வாங்கி அழித்தல் செயற்பாடு பி2பி நிகழ்விலும் இடம்பெற்றது. மக்களாக எல்லாவற்றையும் தயார்படுத்த அரசியல்வாதிகள் அவற்றின் பயனைத் தமது அரசியல் அடைவுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொலிஸ் தடைகள் தகர்த்து சதிமுயற்சிகள் முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவதான தலைவர்களாகத் தம்மைச் சுயவிளம்பரப்படுத்திக் கொண்டு மக்களின் போராட்டத்தை உள்வாங்கி அழித்து இறுதியில் அனைத்துக்குமான கிரடிற்றை தமக்குள் பதுக்கிக் கொண்டு ஒய்யாரமாக வெளிப்படும் வீடியோக்களை நாம் அனைவரும் தெளிவாகக் கண்டு கவலை கொண்டோம்.
இறுதி நாள் நிகழ்வில் இடம்பெற்ற பேச்சு அதனைத் திறம்பட நிறுவியுமிருந்தது. குறிப்பிட்ட சிலரை மாத்திரம் அடையாளப்படுத்தும் திட்டமிடப்பட்ட சமூகவலைத்தளப் பிரச்சாரம் சில விடயங்களைத் தெளிவுபடுத்தியது. மக்கள் போராட்டத்தை தமது முயற்சியாகவும் முன்னெடுப்பாகவும் பிரச்சாரம் செய்யத் தலைப்பட்டவர்கள் ஒரு கட்டத்திலும் 'இது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் நாமும் எமது ஒத்துழைப்பை வழங்க அவர்களோடு இணைந்திருக்கின்றோம்' என்ற விடயத்தைச் சொல்ல அவர்களால் முடியாமலேயே போயிற்று.
மக்கள் திரண்ட களத்திலும் இறுதி நாள் நிகழ்விலும் அரசியல்கட்சி சார்ந்த செயற்பாட்டாளர்களால் உடைவு ஏற்பட்டு குழுக்களாகப் பிரிந்து நின்ற துர்ப்பாக்கியம் நிகழ்ந்துவிட்டதுக்குக் காரணமே, யார் உரிமை கொண்டாடுவது என்ற நிலையில் இருந்து ஏற்பட்டதுதான். இந்தச் சில்லறைத்தனமான வேலைக்காக கொஞ்சம்கூட வருத்தப்படாமல் மக்கள் மன்றில் தாமே இதன் பூரண உரித்தாளிகள் தாமில்லாவிட்டால் இவ்வெழுச்சிப் பேரணியே கிடையாது. என்ற கோதாவில் உரையாற்றிவிட்டுக் கிளம்பியவர்கள் நாடாளுமன்றத்தில் மாற்றிப் பேசினார்கள்.
தமக்கு ஏற்ற மாதிரி எல்லாவற்றையும் மாற்றிப்பேசி சிங்கள மக்களுக்கு மத்தியில் வேறு விம்பத்தைக் கட்டமைக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே அதைப் பார்க்க முடிந்தது.
இத்தகைய மாற்றிப் பேசும் தன்மையும் சுயநலப்போக்கும் புதிதில்லைதான் ஆயினும் மக்களின் மனவுணர்களை மதித்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்குக் கௌரவமளித்து அவர்களது முயற்சிக்கான கௌரவத்தை அவர்களின் போராட்டக் களத்திலேயே அளித்திருக்கலாம்.
அதற்குரிய இடம் அதுதான் ஆனால் அதை அங்கு செய்யுமளவுக்கு பரந்த மனப்பான்மை யிருக்கவில்லை, தலைமைத்துவ ஆசை அதற்கு இடங்கொடுக்கவில்லை கேள்வி - நாடாளுமன்றில் இப்பேரணி குறித்து ஆற்றப்பட்ட உரை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்படுவதேன்? பதில் - சிவில் சமூக அமைப்புகளால் ஏலவே தயாரிக்கப்பட்ட பிரகடன அறிக்கைக்கு அமைவாக அதற்கு வலுசேர்க்கும் விதத்தில் அமையப்பெற்ற மாபெரும் மக்கள் பேரணி என்ற அம்சத்தின் கீர்த்தியை எங்கெல்லாம் குறைத்து மதிப்பிட வைக்க முடியுமோ அங்கெல்லாம் தனது கைங்கரியத்தை சுமந்திரன் மிகச்சரியாகச் செய்திருக்கின்றார்.
அதற்கு அவரது நாடாளுமன்ற உரையொன்றே போதுமானது. பிரகடனத்தின் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்த விதத்தையும் சிங்கள மக்கள் ஜீரணிக்கக் கஸ்டமான விடயங்களை நாடாளுமன்றில் வாசிக்காமல் தவிர்ந்து கொண்டு போராட்டத்தின் ஜீவநாடியான அம்சங்கள் கென்சார்ட்டில் இடம்பெறாமல் மிகக் கவனமாகத் தவிர்ந்துகொண்ட விதத்தையும் அவதானிக்கும் போது அவருடைய உண்மையான சுயரூபம் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.
சிங்களத் தலைமைகளும் மக்களும் இப்போது கருதத் தலைப்பட்டிருக்கும் ஒரு விடயந்தான் தமிழ்மக்களுக்குப் பொருத்தமான சிங்களத் தேசியத்தோடு இயைந்து போகக்கூடிய முரண்பாடுகள் குறைந்த முன்மாதிரித் தமிழர்.
அப்படியென்றால் தமிழ் தேசியத்தை மறுதலித்துநிற்கும் அல்லது தமிழர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாது அதை முழுமையாக மறுதலித்து நிற்கும் மனிதர். அப்படிப்பட்டவர்களைத்தான் சிங்களத் தேசியம் கொண்டாட நினைக்கும். சிங்களத் தேசியத்தை திருப்திப்படுத்தும் அனைத்து வகைக் காரியங்களையும் அவர் நோகாமல் செய்து கொண்டிருப்பார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் அல்லது மக்கள் அபிலாசைகள் தொடர்பில் வரலாற்றை நாடாளுமன்ற உரைகளில்தேடி பழைய கென்சார்ட்களை எடுத்து ஆராய்ந்தால் சிங்களத் தேசியம் தமக்குத் தோதான மனிதராக ஏன் இவரைப் பார்க்கின்றது என்பதற்கான சான்றுகள் தெளிவாகக்கிடைக்கும்.
அவரது ஆங்கில உரைகளில் அது மிக நளினமாக வெளிப்படும். ஆங்கிலம் சாதாரண பொதுமக்களுக்குப் புரியாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது என்றும் கொள்ள முடியும்.
ஆயினும் எல்லாக் காலமும் இத்தகைய வேலைத்திட்டம் நிலைப்பெற்று நிற்பதில்லை அது ஒரு கட்டத்தில் மொத்தமாக வெளிப்படும். தமிழர் போராட்ட வரலாறு நீண்டது. அதற்குள் எத்தனையோ வேடிக்கை மனிதர்களும் நீசர்களும் சுயநலவாதிகளும் காட்டிக் கொடுத்தவர்களும் துரோகிகளும் தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆசையோடும் கனவுகளோடும் நுழைந்து காரியம் சாதிக்க முயன்றிருக்கின்றார்கள்.
ஆனால் வரலாறு மிகத் தெளிவாக எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்திருக்கின்றது. அடையாளப்படுத்தலை திறம்படச் செய்துமிருக்கின்றது. கேள்வி - பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் நிலை குறித்து? பதில் - மலையக அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்தாமல் தமது சுயநல அரசியல் லாபத்துக்காக அதே பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அதைத் தீர்த்துவிடாமல் அதன் உணர்வுகளின் மீதே தொடர்ந்தும் அரசியல் செய்யும் நிலையினை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்து வந்திருக்கின்றோம்.
தமது இருப்பை நிறுவ அவர்களுக்குப் பிரச்சினைகள் தேவைப்பட்டன. அவை இல்லாவிட்டால் அவர்களின் அரசியல் இருப்பு நிலைப்படாது ஆதலால் மிகவும் கவனமாக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தும் பரிதாபம் தொடர்கின்றது.
இப்போது தமிழர் போராட்டக் களத்தில் இதே மனநிலையுடைய அரசியல்வாதிகள் இருப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நலன்களின் மீதே கவனக்குவிவு இருக்கும். அதை அவர்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் நாகரிகம் கருதியும் பொதுநலன்கருதியும் பகிரங்க வெளியில் வெளிப்படுத்தாமல் கடந்து சென்றிருப்போம்.
ஆனால் அதையே தமக்கான பலமான பற்றாகக் கொண்டு தொடர்ந்தும் அதே தவறில் சூட்சுமத்தோடு நிலைத்திருக்கவே விருப்பங்கொள்கின்ற போது மக்களின் நலன் கருதி வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவ்வப்போது எழுகின்றது. ஏனெனில் தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டம் தோல்வியுற்றதும், பொருளாதார மத்திய நிலையம் கைவிட்டுப் போனதும் இன்னும் இது போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பயன்படாது சில்லறைக் காரணங்களால் கைவிடவைக்கப்பட்டமைக்குப் பின்னாலும் மேலே சொன்ன விடயம் தாக்கம் செலுத்தும் காரணியாகி இருக்கின்றது.
ஆனால் காலம் இதையெல்லாம் தெளிவாக வெளிப்படுத்தி அடையாளங்காட்டி நிச்சயம் பதிவு செய்து வைக்கும் அப்போது முகத்திரை கிழிந்திருக்கும். எல்லாவற்றையும் கடந்து தமிழ்மக்களினதும் தமிழ் பேசும்மக்களினதும் அபிலாசைகள் இனி மக்கள் மன்றிலிருந்தே வெளிப்படும் காலம் ஆரம்பித்துவிட்டது.
அது எங்கும் தேங்கி நிற்காது. மக்கள் சரியான தலைமைகளை இனங்கண்டு அவர்களைப் பலப்படுத்தும் வேலையைத் தொடங்குவார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பு அவசியப்படுகின்ற காலம் இது. '
புதிய தலைமுறைக்கு எத்தகைய எதிர்காலத்தை நாம் அடையாளப்படுத்திக் காட்டப்போகின்றோம் என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. நம்பிக்கையை அவர்களுக்கு வலுவாக ஊட்டுவோம்.
நமக்கான விடுதலைக் கீதம் சுதந்திரமாக ஒலிக்கும் காலம் வெகுதூரமில்லை. ஏன் சுமந்திரனை இலக்கு வைத்து அதிக விமர்சனங்கள் எழுகின்றன? அவருடைய உண்மை முகம் வெளிப்படும் போதெல்லாம் அவர் விமர்சிக்கப்படுகின்றார்.
அவரை விமர்சிப்பவர்களுக்கு அவருடன் குடும்பத் தகராறு இருக்கின்றதா அல்லது கொடுக்கல்வாங்கல் பிரச்சினை இருக்கின்றதா அல்லது சொத்துப் பிரச்சினை இருக்கின்றதா! இல்லையே அவரோடு அப்படித் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதுமில்லாதபோது அவர் மீது விமர்சனம் பரவலாக எழுகின்றது என்றால் அவர் அரசியல் தூய்மையான ஆளாக இல்லை.
தமிழ் தேசியத்துக்கு அச்சுறுத்தலாக அவர் தென்படுகின்றபோது அதிகம் விமர்சிக்கப்படுவார். அந்த விமர்சனங்களைப் பட்டியல் போட்டுக்காட்ட முடியும். அவற்றுக்கு முன்னால் சுமந்திரன் குறுகித்தான் நிற்கமுடியும். ஒரு மனிதனுக்குள் அரசியல் பதவி ஆசை போதையாக ஏறி வெறியை உண்டாக்கினால் அவன் எத்தகைய ஆபத்து மிகுந்தவனாக மாறுவான் என்பதற்கு சுமந்திரன் எளிய உதாரணம். அதனால் எச்சரிக்கை பல தரப்பில் இருந்தும் விடுக்கப்படுகின்றது.
அதை விமர்சனமாகப் பார்க்கத் தேவையில்லை. எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
