முல்லைத்தீவில் தென்னைகளைத் தாக்கும் வெள்ளைப் பூச்சி
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும் தென்னைகளை தாக்கும் வெள்ளைப் பூச்சியினால் மக்களிடையே பதட்டம் பரவி வருகின்றது.
தெங்கு பயிர்ச்செய்கையை முதன்மையாக கொண்ட முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் செவ்விளநீரைத் தரக்கூடிய செவ்விளனி தென்னைகளை இந்தப் பூச்சி அதிகம் தாக்குவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பல ஊரிலும் பரவலாக இந்த பூச்சியின் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.தென்னைகளின் கீழுள்ள தாவரங்களிலும் இந்த பூச்சியை அவதானிக்க முடிகின்றது.
மேலும், வாழை, நாவல் , பயிர்கள் என எல்லா வகைத் தாவரங்களையும் இது தாக்க ஆரம்பித்துள்ள மையும் நோக்கத்தக்கது.
விளைச்சல் இல்லாது போகும் தென்னைகள்
நன்றாக குலைகட்டி காய்த்து வந்த செவ்விளனி தென்னைகள் சோர்ந்து போய் இருக்கின்றது. பாளை வருவதில்லை.காய்க்காது இருப்பது கவலையளிக்கின்றது என தென்னம் தோட்ட உரிமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
முதலில் வீட்டில் இருந்த ஒரு தென்னையில் அவதானிக்க முடிந்தது. பிறகு மெல்ல மெல்ல இருந்த நான்கு செவ்விளனி மரத்துக்கும் பரவியிருக்கிறது.
இதன்படி பெரிய மற்றைய தென்னைகளுக்கும் இப்போது தொடர்ந்து பரவி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெரிய தென்னைகளை அதிகளவில் தாக்கினால் தேங்காய் உற்பத்தியில் பாரியளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும். தங்களுக்கு தென்னையினால் கிடைக்கும் வருமானம் பெருமளவில் தடைப்படும் நிலை தோன்றும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்போது செவ்விளனி மரத்தில் பாளை வருவதில்லை. இதனால் இளநீர் உற்பத்தியும் வெகுவாக குறைந்து செல்கிறது. பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளான தென்னை ஓலைகள் காயும் போதே ஊக்கிவிடுகின்றதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், எதிர்காலத்தில் கிடுகுகளுக்கும் இளநீர், மற்றும் தேங்காய் உற்பத்தியும் பாதிக்கப்படும் என உடுப்புக்குள கிராமத்தின் முன்னோடிகளில் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
பூச்சித் தாக்கத்தினை தன்மை
வெண்ணிற சிறிய பூச்சிகளாக இவை இருக்கின்றன.அந்துப்பூச்சிகள் போன்று தோற்றமளிக்கின்றன.
பூச்சிகள் கூட்டமாக சேர்ந்து இலை முழுவதும் பரவி அமர்கின்றன.மெதுவான நகர்வையும் அவை காட்டுகின்றன. வெண்ணிற அழுக்கணவன் பூச்சிகளைப் போல இவற்றின் நடத்தை இருப்பதால் மக்களிடையே அழுக்கணவன் என தவறான எண்ணம் பரவி இருப்பதாக ஒரு விவசாயி தன் அவதானித்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
பூச்சிகள் தாக்கும் இடங்களில் எண்ணெய்ப்பசை போன்ற பசைத்தன்மையான பதார்த்தத்தினை அவதானிக்க முடிகின்றது. பின்னர் அந்த இடம் கறுப்பு நிறமாக மாறுகின்றது. அதிகமாக இந்த மாற்றத்தினை ஒளித்தொகுப்பு செய்யும் பச்சைநிறமான இலை மற்றும் தட்டுகளில் அவதானிக்க முடிகின்றது.
தாவரத்தின் ஒளித்தொகுப்புக்கான சூரிய ஒளியை அது பெற்றுக்கொள்வதில் இந்த மாற்றம் தடுத்து விடுவதால் தாவரம் உணவை உற்பத்தி செய்ய முடியாது இறந்து போகும் அபாயம் இருக்கின்றது. அத்தோடு இயல்பாகவே விளைச்சலை இது பாதித்து விடுகின்றது.
விவசாய ஆசிரியரின் அனுபவம்
உடுப்புமாவெளியில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் உள்ள செவ்விளனி மரங்களின் ஓலைகள் முழுவதும் இந்த எண்ணெய் படை படர்ந்து கறுப்பாகவும் வெண்சாம்பலாகவும் ஓலைகள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
அதே ஊரின் பிரதான வீதியில் செல்வராசா என்பவரது வீட்டின் நாவல் மரத்திலும் அதன் கீழ் உள்ள வாழை மற்றும் பூச்செடிகளிலும் இதனை அவதானிக்க முடிகின்றது.
முள்ளியவளையில் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகிலுள்ள பல இடங்களிலும் இந்த தாக்கத்தினை நேரடியாக அவதானிக்க முடிகின்றது.
மேலும், கொக்கிளாய் முதல் முல்லைத்தீவின் பல இடங்களிலும் இந்த தாக்கத்தினை அவதானிக்க முடியும் என விவசாயிகளிடையே மேற்கொண்ட கலந்துரையாடல்களின் போது தகவல்களை பெற முடிந்தது.
அத்தோடு, குமுழமுனையிலும் தென்னை மற்றும் வாழை மரங்களை அதிகம் தாக்கி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
வாழையும் அதிகம் இந்த தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதால் வாழைத்தோட்டத்தினை முற்றாக அழிந்து நிலத்தினை எரியூட்டி வெய்யில் காய விட்டதாக ஒரு விவசாய ஆசிரியர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பூச்சியின் தாக்கம்
தன்னுடைய எழுபது வருட அனுபவத்தில் இந்த பூச்சியின் தாக்கம் இதுதான் முதல் முறையாக இருப்பதாக ஒரு மூதாட்டி கூறுகின்றார்.
அவரது வீட்டின் பயிர்களில் அதிகளவில் இதன் தாக்கத்தினை உணர்வதாகவும் பயிர்களில் விளைச்சல் முற்றாக தடைப்பட்டு விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவின் பல இடங்களிலும் வத்தகை பயிரிடப்படுவதால் அந்த பயிர்ச்செய்கையின் மூலம் இது பரவியிருக்கலாம் என அவர் தன் அவதானிப்பினையும் பகிர்ந்து கொண்டார்.
வத்தகைச் செய்கை பாரியளவில் இப்போதுதான் முல்லைத்தீவில் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாலும் இதற்கு முன்னர் இந்த பூச்சி அவதானிக்கப்படாததாலும் தனக்கு இவ்வாறான சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த விவசாயியின் கருத்துக்களை எடுகோளாகக் கொண்டு விவசாயத்துறைசார் நிபுணர்கள் ஆராய்சியை மேற்கொண்டு விரைவாக இந்த பூச்சியின் தாக்கத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
கமநல சேவைகள் திணைக்களம்
இந்நிலையில், கமநல சேவைகள் திணைக்களத்தினால் போதியளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளிடையே அதிருப்தி நிலவி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
எல்லாச் சந்தர்ப்பங்களைப் போலவே இதுவும் ஒரு நோயாக இருக்கும் போது ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
அத்தோடு, விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு விவசாய உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவிட ஆய்வாளர் வரதனுடன் இது தொடர்பில் கேட்ட போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
விவசாயி பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படும் போது நாட்டின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அது அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள் பலரும் தென்னைகளின் கீழ் கடும் புகை மூட்டுவதால் வெள்ளைப் பூச்சிகள் நிலத்தில் விழுந்து இறப்பதை அவதானிக்கலாம் என்று கூறுவதையும் கமநல சேவைகள் அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாதிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும், பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |