வரலாறு காணாத அளவில் இராணுவத்திற்கு நிதி ஒதுக்கும் டிரம்ப் அரசு
ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், 2027 ஆம் நிதியாண்டிற்கான பாதீட்டுக் கோரிக்கையாக சுமார் 1.5 டிரில்லியன் டொலர் நிதியை இராணுவத்திற்காக ஒதுக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.
இது நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவச் செலவினமாகும். கடந்த ஆண்டை விட 40% தொகை கூடுதலாக முன்மொழியப்பட்டுள்ள
இந்தத் திட்டத்தின் மூலம், போர்க்கருவிகளை அதிகரித்தல், கடற்படைக் கப்பல்களைக் கட்டமைத்தல் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கனவுத் திட்டமான "கோல்டன் டோம்" (Golden Dome) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மேலும், இராணுவ ஆள்சேர்ப்பை ஊக்குவிக்க வீரர்களுக்கு 5% முதல் 7% வரை ஊதிய உயர்வு வழங்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கான இந்த நிதி அதிகரிப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக நலத்திட்டங்களுக்கான ஒதுக்கத்தை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் "வோக்" (Woke) என்று வர்ணிக்கும் சுமார் 73 பில்லியன் டொலர் மதிப்பிலான உள்நாட்டுத் திட்டங்களைக் குறைக்க பாதீடு முன்மொழிகிறது.
குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான எரிசக்தி உதவித் திட்டம் (4 பில்லியன் டொலர்), வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) மற்றும் வீடற்றவர்களுக்கான உதவித் திட்டங்கள் ஆகியவற்றில் கணிசமான நிதி குறைக்கப்படவுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் தூய்மையான எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான நிதியை ரத்து செய்யவும், மின்சார வாகன சார்ஜர்களுக்கான மானியங்களை நிறுத்தவும் இந்த வரைவுத் திட்டம் வழிவகை செய்கிறது.
மேலும், இந்த பாதீடுத் திட்டத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பல மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவான TSA-வை தனியார்மயமாக்கும் முயற்சிகளைத் தொடங்குதல், உள்நாட்டு வருவாய் சேவை (IRS) மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களுக்கான (NIH) நிதியைக் குறைத்தல் போன்றவை இதில் அடங்கும்.
இந்த 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ நிதியில், 350 பில்லியன் டொலர் நிதியை ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவின்றி, குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்டு செனட்டில் நிறைவேற்ற வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.