வன்முறைகள் வெடிக்கும் அபாயம் - பாதுகாப்புக்கு இராணுவத்தினருக்கு அழைப்பு
மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் மோதல்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையினால் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை பெறுவதனை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இருந்த போதிலும் கொழும்பு நகரில் அதிகளவான இராணுவத்தினர் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இராணுவ பாதுகாப்பை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்னும் ஸ்திரமாக இல்லாத சூழ்நிலையில் வாகனத்தின் இலக்க தகட்டின் இறுதி எண்ணுக்கு ஏற்ப எரிபொருளை வழங்கப்படுகின்றது.
வன்முறை வெடிக்கும் அபாயம்
எனினும் இவ்வாறான ஒழுங்கற்ற பின்னணியில், இன்னமும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
பல சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படுவதுடன் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிரமம் ஏற்படுகின்றது.
இந்த நேரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அவசியமானது என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.