சர்வகட்சி அரசாங்கத்தால் நெருக்கடியில் ரணில்
சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதை மேலும் தாமதப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பாக பல அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம்
இந்தக் கலந்துரையாடல்களில், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அந்த கலந்துரையாடல்களில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வ கட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பெரமுன கட்சிக்குள் முரண்பாடு
இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் அந்தந்தக் கட்சிகளில் இருந்து இணைய விரும்பும் உறுப்பினர்களை இணைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய, அனைவருக்கும் ஆதரவாக ஒன்றிணைந்த குழுக்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட போதிலும், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான அமைச்சர்களின் கோரிக்கை காரணமாக சர்வக்கட்சி அமைச்சரவை அமைப்பது மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.