ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகரும் அரசியலில் ஈழத்தமிழரின் நிலையென்ன...!
இலங்கை அரசியல் 2024ம் ஆண்டு 9வது ஜனாதிபதி தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும், ராஜபக்ச குடும்பத்திற்கும், ஏன் பௌத்த மகாசங்கத்திற்கு கூட ஒரே தெரிவாக இருப்பது ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.
அதே நேரத்தில் அண்டை நாடான இந்தியாவிற்கு எந்த தெரிவும் இல்லாத ஒரு அரசியற் சூழமைவு இலங்கை தீவுக்குள் உருவாக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பின்னணியில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அண்டைநாட்டு, பன்னாட்டு அரசியல் நிலைப்பாடும், உள்நாட்டு அரசியல் நடைமுறைகளும், நகர்வுகளையும் பற்றி ஆழமாக ஆராய்வது ஈழத் தமிழருடைய அரசியல் செல்போக்கை தீர்மானிப்பதற்கு அவசியமானது.
இந்த மாதம் இலங்கைக்கு வரவிருந்த சீனக் கப்பல் இந்திய மேற்குலக ராஜேந்திர அழுத்தம் கரணமாக வரமாட்டாது என கூறப்பட்டது. ஆனாலும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கான அனுமதி சீனாவிற்கு வழங்கப்பட்டு விட்டது.
சீனக் கப்பல் வருகை
எனவே சீனா எப்போதும் தான் முன்வைத்த காலை பின்னெடுப்பதில்லை என்பது வரும் டிசம்பர் மாதம் சீனக் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரவிருப்பதிலிருந்து நிரூபணமாகிறது. இதே அம்பாந்தோட்டத் துறைமுகம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திற்தான் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல அடுத்த வருட முற்பகுதியில் இந்திய தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தருணத்தை அண்மித்த காலத்தில் இலங்கை மீது இந்தியா பெரிய அளவு அழுத்தத்தை பிரயோகிப்பது கடினம் . இலங்கையிலும் அதே காலத்திலேயே தேர்தலை ரணில் நடாத்தவிரும்புவார்.
ஆகவே சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கான காலத்தை சரியாகக் கணிப்பிட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து செல்வதன் ஊடாக சர்வதேச பொது வழக்கம் ஒன்றை சீனா ஏற்படுத்த முனைகிறது. அதைப் பழக்கப்படுத்தவும் முனைகிறது என்று சொல்வது சாலப் பொருந்தும்.
எதிர்காலத்தில் சீனாவுடைய எத்தகைய கப்பல்கள் இலங்கைக்கு வந்தாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு இயல்பு நிலையை தோற்றுவிப்பதுதான் சீனாவினுடைய தந்திரமாக அமைகிறது.
இதற்கு சீனாவிற்கு முழுமையான ஆதரவை வழங்கக்கூடிய ஒரே ஒரு நபர் இப்போது ரணிலாகத்தான் இருக்கிறார். ரணில் சீனாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதராக அப்போத இலங்கையில் இருக்கிறார்.
இலங்கைக்கும் சீனாவுக்குமான அரசியல் உறவு 1407 ஆம் ஆண்டு சீனக் கடற்படைத்ட தளபதி அட்மிரல் ஷாங்கி கொழும்பு கோட்டைக்கு வந்ததிலிருந்து ஆரம்பமாகியது.
அதற்கு முன்னரும், பின்னரும் கடல் வாணிபத்தின் ஊடாகவும் உறவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1952 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதமர் டட்லி சேனநாயக்க அவர்களினால் சீனாவுடன் அரிசி-ரபர் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இலங்கை- சீன இராஜதந்திர உறவு
அன்றிலிருந்து இலங்கைக்கும் சீனாவுக்குமான இராஜதந்திர உறவு விரித்தியடைய ஆரம்பித்தது. அந்த உறவு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், கொழும்பு கிழக்கு-மேற்கு இறங்குதுறை குத்தகைகள் மற்றும் கொழும்பு போர்ட் சிட்றி கட்டிட நிர்மாண ஒப்பந்தங்கள் வரை வலுவடைந்து விரிவடைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் ஜுவான் வாங்-5 சீனாவின் உளவு கப்பல் இந்தியவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை சீனத் துறைமுகத்துக்கு வந்து சென்றது.
தற்போது வட-கிழக்கில் கடல்வள அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா தமிழர் தாயகத்தில் வலுவாக காலூன்றிவிட்டது. இன்று இலங்கையில் ஏறத்தாழ ஐந்து லட்சம் சீனத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் சீனா தொடர்ந்து தன்னை இலங்கையில் தக்க வைப்பதற்கு இலங்கை அரசியலில் எதிர்காலத்தில் தலைவராக இருக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே உண்டு என்று வலுவாக நம்புகிறது. அது உண்மையும் கூடத்தான்.
இப்போது இருக்கின்ற நிலைமையில் சஜித் பிரேமதாசாவால் இலங்கை ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாது என்பது மேற்குலக மற்றும் சீன உளவு நிறுவனங்களுக்கு நன்கு தெரியும்.
அதுமட்டுமல்ல இப்போது இருக்கின்ற உள்நாட்டு அரசியல் நெருக்கடியில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஒருவரை உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது களத்தில இறக்க முடியாது.
ராஜபக்ச குடும்பத்தினர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் கொலை குற்றவாளிகள் என்ற முத்திரையுடன் இருக்கிறார்கள். இத்தகைய இனப்படுகொலையாளிகளை எந்த நேரத்திலும் சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது மேற்குலக அழுத்தத்தினாலோ பணிய வைத்துவிட முடியும்.
குறை நிரப்பு ஜனாதிபதி
இந்த கொலைக் குற்றத்தைக் காட்டி அமெரிக்கா சார்ந்த மேற்குலகமும் அல்லது பிராந்திய வல்லரசான இந்தியாவினாலும் ராஜபக்சே குடும்பத்தைச் சார்ந்தவர்களை மிரட்டி பணிய வைக்க முடியும். அதன் ஊடாக அவர்கள் இவர்களை தம்பக்கம் சாய்க்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும்.
அத்தோடு ராஜபக்ச குடும்பத்தில் மூளைசாலியாக வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ச உள்நாட்டிலும் கட்சி ரீதியாகவும் செல்வாக்கற்றவர். எனவே அவரை முதன்மைப் படுத்த முடியாது. அதே நேரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் முதன்மையான வாரிசாக நிற்க கூடியவர் நாமல் ராஜபக்சேதான்.
ஆனாலும் ராஜபக்ச குடும்பம் சர்வதேசரீதியாக பெற்றிருக்கின்ற கொலை குற்றத்திலிருந்து விடுபடுவதற்கும் தம்மை உள்நாட்டில் பலப்படுத்துவதற்கும் மேலும் சில காலம் தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு சாதகமான சூழல் தோன்றும் வரை ராஜபக்ச குடும்பம் நாமலை ஜனாதிபதி தேர்தற் களத்தில் இறக்க விரும்ப மாட்டார்கள்.
எனவேதான் ராஜபக்சக்கள் ரணிலை தமது பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள், முன்னுறுத்த விரும்புகிறார்கள். அது மட்டும் அல்ல இதில் இன்னும் ஒரு அரசியலின் உள்ளே உள்ள ஒரு அரசியல் உண்டு.
அது என்னவெனில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று அதிகாரத்தில் இருக்கும்போது மரணம் அடைந்துவிட்டால் அந்தக் குறை நிரப்பு ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவையே அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
அப்படி ஒன்று நிகழ்ந்தால் நிச்சயம் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்பது நிச்சயம். அதற்கடுத்ததாக ராஜபக்சக்களின் கட்சிக்குள் இருக்கின்ற டலஸ் அழகப்பெருமா கடந்த உள்ளக ஜனாதிபதி தேர்தலில் இந்தியா ஆதரவளித்தும் அல்லது இந்தியா அவரை விரும்பினும் அவர் தோல்வியடைந்திருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதி வெற்றிடத்தை நிரப்புவதற்கான உள்ளகத் தேர்தலில் அழகப் பெருமா தோல்வி அடைந்தது என்பது அவருடைய அரசியல் எதிர்காலத்தை சூனியம் ஆக்கிவிட்டது.
கட்சிப் பலம் அற்ற நிலையில் முதன்முறை தோல்வியடைந்தவர் எதிர்காலத்தில் வெற்றி பெறுவது அரிது என்பது அரசியல் யதார்த்தம். எனவே அழகப்பெருமா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது.
சீனாவின் நம்பிக்கை
அவ்வாறே ஜேவிபி கட்சியில் இருந்து வருகின்ற போட்டியாளர்கள் இலங்கை வாக்காளர்களில் 6 வீத வாக்குகளுக்கு மேல் பெறுவது அரிது. இந்த அடிப்படையில் ஜேவிபி கட்சி சார்ந்த யாரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவோ, செல்வாக்கு செலுத்தவோ முடியாது.
அத்தோடு ரணில் விக்கிரமசிங்க இஸ்லாமியரைத் தன்பக்கம் சாய்பதற்கு அலி சவுரியை தன்னுடன் வைத்துக்கொண்டு உள்ளார். அத்தோடு உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுகின்ற அனைத்து முஸ்லிம்களும் இன்று விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.
எனவே இஸ்லாமியர்களின் பெரும்பான்மையானவர்களுடைய வாக்கு ரணிலினுடைய பெட்டிகளையே நிரப்ப அதிகவாய்ப்புண்டு. இதன் அடிப்படையிற்தான் ஒப்பீட்டுரீதியில் யாருக்கும் கட்டுப்பட வாய்ப்பில்லாத , அரசியல் சாணக்கியமிக்க ரணிலை தனக்குச் சாதகமாகக் கையாளலாமென்று சீனா நம்புகிறது.
ரணிலும் அதை நிரூபிக்கும் வகையில் சீனாவுடன் ஒத்துளைத்து நடக்கிறார்.
நாமல் வளரும் வரையான இடைக்காலத்தில் இந்தியாவை எதிர்கொள்ள வல்லவரும் மேற்குலக ஆதரவையும் உள்நாட்டு ஆதரவையும் பெற்றவரான ரணில் விக்ரமசிங்காவை ஆதரித்துச் சிம்மாசனத்தில் ஏற்றுவது இன்றைய நிலையில் தனக்குச் சாதகமென சீனா கணக்குப் போடுகிறது போல் தெரிகிறது.
இலங்கையின் சிங்கள ஆளும் உயர்குழாத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அல்லது ரணில் விக்ரமசிங்கவையோ பொறுத்தவரையில் அவர்கள் இதயசுக்தியாக மேற்குலக அனுதாவிகளும் ஆதரவாளர்களுமே. அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.
எனவே இவர்கள் உலகம் தழுவிய அரசியலில் மேற்குலக ஆதரவாளர்களாக தம்மை வெளிக் காட்டுவர். அதே நேரத்தில் புவிசார் அரசியலில் இந்து சமுத்திரத்தில் சீனாவுக்குள்ள வாய்ப்பை பயன்படுத்தி சிங்கள தேசத்தை விருத்தி செய்வதற்கு சீனாவை நண்பனாக்கிக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் சீனாவைவிட்டு இலங்கை விலகிவிட முடியாது என்பதும் சீனாவைச் சார்ந்தே இலங்கை தனது அரசியற் பொருளாதார இராணுவ நலன்களை மேம்படுத்த முடியும் என்பதும் சீன- சிங்கள அரசுகளின் அரசியல் உள்ளோட்டமாக உள்ளது.
இந்தியாவின் துணை
எனவே இரு தரப்புக்கும் எந்த வகையிலும் விட்டுவிலக முடியாத புவிசார் அரசியல், பொருளியல், இராணுவக் கண்ணோட்டங்களும், நிர்பந்தங்களும், நிர்ணயங்களும் உண்டு.
சீனாவைவிட்டு இலங்கையை விலக்குவதற்கு இந்தப் பிராந்தியத்தில் ஆளுமை செலுத்தக்கூடிய சக்தியாக இந்தியா மாத்திரமே உண்டு. இந்தியாவின் துணை இன்றி மேற்குலகத்தினாலும் இலங்கையிலிருந்து சீனாவை அகற்றிவிட அல்லது தள்ளிவைக்க முடியாது.
ஏனெனில் அமெரிக்காவோ ஐரோப்பாவோ இலங்கை தீவில் இருந்து 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகள். இவர்களினால் நேரடியாக நடைமுறை அர்த்தத்தில் இலங்கை மீது செல்வாக்கைச் செலுத்த முடியாது.
எனவே இலங்கைத்தீவை கையாள்வதற்கு மேற்குலகத்தாருக்கு இந்தியா தேவையாக உள்ளது. மட்டுமல்ல இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதரவின்றி, அனுசரணை இன்றி மேற்குலகத்தால் இலங்கைதீவை கட்டுப்படுத்த முடியாது.
ஆகவே இந்தியாவினுடைய தலையீடு இன்றி இந்தியாவுடைய பல பிரயோகம் இன்றி ஒரு போதும் சீன-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படவதற்கான சாத்தியமில்லை.
இந்தப் பின்னணியில் 2024 ஆம் ஆண்டு வரப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் நடக்க வேண்டுமாக இருந்தால் இந்தியாவில் 2024ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடத்தப்படவிருக்கிற காலகட்டத்தில் அந்தக் காலத்தை ஒட்டியே இலங்கையிலும் அனேகமாக மே மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணில் திட்டமிட்டு அறிவிப்பார் என்பது நிச்சயம்.
2024ம் ஆண்டின் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலில் இந்திய, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் வகிக்கக்கூடிய வகிபாத்திரங்கள் பற்றி பார்த்தோம்.
இந்நிலையில் இலங்கை அரசியலில் உள்நாட்டில் ஈழத் தமிழர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? எத்தகைய நிலைப்பாடு தமிழர்களுக்கான ஒரு சாதகத் தன்மையை உருவாக்கும் என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 18 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.