ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்..
ஈழத்தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமது அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக முறை தழுவிய அகிம்சை போராட்டங்களின் தோல்வி ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் திணித்தது.
அகிம்சை போராட்டத்தின் தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாசையை நாடாளுமன்றத்துக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அற்றுப்போன நிலையில் தான் வட்டுக்கோட்டை தீர்மானம் தனிநாடு என்ற இலக்கை நிர்ணயித்து. அதற்காக ராஜதந்திர வழிகளில் போராடுவது என்றும் அது தோல்வியடையும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை இளைஞர்கள் கையில் எடுப்பார்கள் என்றும் பறைசாற்றியது.
ஆயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை திட்டம்(Manifesto) ஒன்றை முன் வைக்கவில்லை.
அத்தோடு வட்டுக்கோட்டை தீர்மானத்தினுடைய எந்த ஒரு முன்மொழிவுகளையும் கடைப்பிடிக்காமல் நாடாளுமன்ற கதிரையிலேயே சங்கமம் ஆகிவிட்டனர்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முன்மொழிவுகளை தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து 1977ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவெற்றி பெற்றிருந்த போதிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கிணங்க அவர்களால் குறிப்பிடும் நிழல் அரசாங்கத்தை அமைக்காமல் இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள் சென்று சங்கமம் ஆகிவிட்டனர்.
இவர்கள் மீதான நம்பிக்கையற்றுப் போனமை ஆயுதப் போராட்டத்தை வேகமாக முன்னோக்கித் தள்ளியது.
இந்தப் பின்னணியில்தான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் வீறுகொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தாலும் 5 விடுதலை இயக்கங்களை முதன்மை பெற்று முன்னிலைக்கு வந்தனர்.
ஆயினும் இந்த ஐந்து இயக்கங்களிடமும் விடுதலைக்கான ஒரு கொள்கை திட்ட வரவை எழுத்து மூலமாக முன்வைக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் "சுதந்திர சோசலீச தமிழிழத்தை நோக்கி"என்ற ஒரு நுலை கொள்கைத்திட்ட வரைபாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் அந்த "சுதந்திர சோஷலிச தமிழிழத்தை நோக்கி" என்ற அந்த கொள்கை திட்ட வரைவு போதாமை இருந்தமை என்பது உண்மைதான். காரணம் அன்றைய காலத்தில் இடதுசாரிகள் தமிழ் தேசியத்தையோ, தனிநாட்டையோ ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இடதுசாரிகளின் கேள்விகளுக்கும், ஐயப்பாடுகளுக்கும், அவர்களின் முரண் நிலைக்கும் விளக்கம் அளிக்கக் கூடிய வகையில் சுதந்திர தமிழீழத்திற்கான தேவையையும், அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் அது அமைந்திருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் செல்ல வேண்டும்.
ஏனைய நான்கு விடுதலை இயக்கங்களும் இத்தகைய ஒரு கொள்கை திட்ட வரைபை எழுத்து மூலமாக பொதுவெளியில் முன்வைக்கவில்லை என்பது துரதிஷ்டமே.
செல்லரித்துப்போன தமிழரசு கட்சியின் கொள்கை
இந்தப் பின்னணியில் சரிகள், தவறுகள், பிழைகள், போதாமைகள் என்பவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் வீறுகொண்ட எழுந்து தமிழர் தாயகத்தின் கணிசமான நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டங்கள் கொண்டு வந்திருந்தாலும் உலகளாவிய அரசியல் ஒழுங்கிலும் போக்கிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அமைய நம்மை நாம் தகவமைக்காததன் விளைவு 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.
முள்ளிவாய்க்கால் பெரும் தோல்விக்கு பின்னர் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் மீண்டும் எழுந்த மிதவாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் தாம் எவ்வகையான முன்னகர்வை செய்யப் போகிறோம் என்பதற்கான ஒரு கொள்கை திட்டத்தை இப்பந்தி எழுதப்படும் நிமிடம் வரை முன் வைக்கவில்லை.
மாறாக 76 ஆண்டுகளுக்கு முந்தைய செல்லரித்து உத்தூக்கிப்போன தமிழரசு கட்சியின் கொள்கை திட்டத்தையே இந்த நிமிடம் வரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த மிதவாத அரசியல் தலைமைகளின் கொள்கை பற்றிய, இனப்பெற்று, அரசியல் அறிவு, அரசியல் இலக்கு என்பவை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
ஏனைய தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும் இந்த நிலையிலேயே உள்ளனர்.
ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் தமிழ்த்தேசியமும், கொள்கைகளும், கோட்பாடுகளும் சீரழிந்து சின்னா பின்னப்பட்ட போயிருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களுடைய விடுதலைக்கான வழிவகை என்ன? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமானது.
அத்தகைய ஒரு வழி வகையை தேடுகின்ற, கண்டறிகின்ற சிந்தனை போக்குக்கு செல்வதற்கு தமிழ் மக்களுக்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்கள் தேவையாக உள்ளது.
அந்த அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கான விடுதலை நோக்கிய பயணத்திற்கு அறிவியல் மையப்படுத்துவதற்கும் தயார்படுத்துவதற்குமான அறிவியல் ஆய்வு மையம் அவசியமானது.
அத்தகைய ஒரு அறிவியல் ஆய்வு மையத்தினால் மட்டுமே தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்கான கொள்கைத் திட்டம்(Manifesto) ஒன்றை வரைய முடியும்.
அந்தக் கொள்கை திட்டத்தை "தமிழீழக் கொள்கைத் திட்டம்" (Tamil Eelam Manifesto) என்று அழைப்பதே பொருத்தமானது.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசை
இத்தகைய கொள்கை திட்டம் அறிமுகம் என்பது எவ்வாறு? எவற்றையெல்லாம் உள்ளடக்கியவாறு வரையப்பட வேண்டும் என்பது இங்கே முக்கியமானது.
சரியான கொள்கைத்திட திட்டமிடலின்றி வெற்றியை நெருங்க முடியாது. வெறும் மனவிருப்பங்களினாலும், ஆசைகளினாலும், வீரதீர பிரகடனங்களினாலும் கற்பனையில் மட்டுமே பெரும் கோட்டை கொத்தளங்களை மாளிகைகளை கட்ட முடியும்.
ஆனால் நடைமுறையில் எம்மிடம் என்ன இருக்கின்றதோ அதனை வைத்துக் கொண்டுதான் எதனையும் சாதிக்க முடியும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் போக்கு என்ன? பிராந்தியத்தின் அரசியல் சூழமைவு என்ன? தமிழ் மக்களின் இருப்பு நிலை என்ன? என்பவற்றை உள்ளடக்கியதாகவே அறிவார்ந்து நடைமுறையில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசை பூர்த்தி செய்வதற்கான வழியை தேட வேண்டும்,வகுக்க வேண்டும்.
அறிவே இன்றைய மனித வாழ்வுக்கும் இருப்பிற்குமான அரணாகும். இன்றைய மனித நடத்தை அனைத்தும் அறிவில்தான் தங்கியிருக்கிறது.
தமிழரின் விடுதலைக்கான முன்வரைவும் அறிவிற்தான் ஆரம்பமாகிறது. விடுதலைக்கான அடித்தமும் அறிவிற்தான் தளமிடுகிறது. விடுதலைக்கான கட்டுமானமும் அறிவாற்தான் நிமிர்ந்து எழுகிறது.
மொத்தத்தில் அறிவே அனைத்திற்குமான மையப்புள்ளி. அறிவே ஆக்கத்திற்கான ஊற்று. விடுதலைக்காக அனைத்துவகை பூட்டுக்களையும் திறக்கவல்ல முதன்மைத் திறவுகோல் (Masterkey)) அறிவுதான்.
அத்தகைய அறிவார்ந்த செயல்வடிவ பௌத்த சிங்கள அரச நிறுவனத்திற்கு அடிப்படையில் அறிவார்ந்த அணுகுமுறைக்கான பல்வகை நிறுவனங்கள் இயல்பாக உள்ள நிலையில் ஆட்சியாளரின் தீர்மானங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அறிஞர்களின் பங்களிப்பு தயார்நிலையில் உயிரோட்டமாய் இருக்கும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அத்தகைய உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான அரச நிறுவன துணை இல்லாததால் உணர்வுபூர்வமான அறிவார்ந்த அணுகுமுறைகள் மூலம் இவ்விடைவெளியை இட்டு நிரப்பி முன்னேற வேண்டும்.
ஒடுக்கும் அரசினுடைய சகோதர நிறுவனங்களும், சேய் நிறுவனங்களும் ஒன்றை ஒன்று வழிநடத்தும், ஒன்றுக்கொன்று துணைநிற்கும், ஒன்றை இன்னொன்று இழுத்துச் செல்லும் இதனால் அறிவார்ந்த கூட்டு செயற்போக்கு இத்தகைய நிறுவன அமைப்பு முறையில் உண்டு.
இந்த வாய்ப்பு ஈழத்தமிழருக்கு இல்லை. ஆனாலும் இதற்கான வெற்றிடத்தை தனி முக்கியத்துவம் வாய்ந்த திட்டமிட்ட அறிவுசார் அமைப்புகள் மூலமே நிரப்ப முடியும். ஈழத்தமிழரின் காலனித்துவகால அரசியல் முன்னெடுப்புக்களிலும் சரி, சுதந்திர இலங்கையின் சிங்களத் தலைவர்களுடனான அரசியல் பேரம் பேசல்களிலும், ஒப்பந்தங்களிலும் சரி தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்திலும் சரி அரசறிவியல் அறிஞர்களின் பங்களிப்பு அரிதாகவே இருந்துள்ளது.
வல்லரசுகள் சார்ந்ததுமான அணுகுமுறை
தமிழ்ச் சமூகத்திடம் ஏற்கனவே இருந்த குடியேற்றவாத ஆட்சிக்கால கருத்துமண்டலம் வேலைவாய்ப்பு, உத்தியோக நலன் என்பன அரச மற்றும் அரசு சார் நிறுவனம் சார்ந்து இருந்தமையால் மத்தியத் தர வர்க்கத்தில் எழத்தக்க அறிஞர்கள் அரச உத்தியோகத்தர்களாக தனிநலன் சார்ந்து பொது நலனையோ இன நலனையோ கருத்தில் எடுக்காமல் மௌனமாக இருந்து விட்டனர் என்பது கசப்பான உண்மையாகும்.
இத்தகைய அந்நியர்களால் புகுத்தப்பட்ட கருத்து மண்டலம் தமிழ் அறிஞர்களால் நமது இனத்துக்கான பங்களிப்பை ஆற்ற முடியாமல் கருவிலேயே அழித்தொழித்து விட்டது.
சுமார் மூன்று நூற்றாண்டுகள் காலனித்துவத்திடமும், சுமார் ஒரு நூற்றாண்டு சிங்கள தேசிய இனத்திடமும் இழந்து போன இறைமையை மீட்பதற்கான தொடர் போராட்டங்களில் எதனையுமே பெறமுடியாமல் நாம் பெற்ற நீண்ட தொடர் தோல்விகளிலும், படிப்பினைகளிலும் இருந்து நாம் கற்றுக் கொண்டவைகளை முன்நிறுத்தி விடுதலைக்கான அறிவார்ந்த கொள்கை திட்ட வரைபை உடனடியாக வரைய வேண்டும்.
அது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் பூகோள, புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கும், உள்நாட்டு பிராந்திய நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர் நிலைமைகளுக்கும் பொருத்தமான வகையில் நடைமுறை சார்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய தமிழீழக் கொள்கைத் திட்ட (Tamil Eelam Manifesto ) அறிமுகம் அமைய வேண்டியது அவசியமானது.
அத்தகைய தமிழீழக் கொள்கைத் திட்ட வரைபின் முதல் அத்தியாயம்ச ஈழத் தமிழர் இழந்துபோன இறைமையை மீட்பதற்கான சவால்கள் என்ன? இன்றைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பிரச்சினைகள் எவை? என்பதைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தி பிரச்சினைகள் இனம் காணப்படல் வேண்டும்.
இலங்கைத் தீவின் 74வீத சிங்கள சனத்தொகையைக் கொண்ட சிங்கள பௌத்த இன ஒடுக்குமுறை அரசுடன் போராடி ஈழத் தமிழர்கள் இன ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராட வேண்டிய அதேவேளை மறுபுறம் புவிசார் அரசியல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான புவிசார் அரசியல் வியூகத்தில் இந்தியா சார்ந்தும், இந்து சமுத்திர அரசியல் சார்ந்தும் வல்லரசுகள் சார்ந்ததுமான அணுகுமுறையை மிகக் கவனமாக கையாளவேண்டியும் உள்ளது.
மேற்குலகம் பிராந்தியம் என்ற இரண்டு நிலைமைகளில் இருதலை கொள்ளி நிலை எப்போதும் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து பயணிக்கிறது.
இதுவே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டதில் காணப்படும் தலையாய பிரச்சினையாகும்.
ஈழத் தமிழரின் தாயக நிலம் ஒன்றுமில்லாத அளவு கேந்திர ஸ்தானத்தை பெறுகின்ற போதிலும் அந்தக் கேந்திர தானமே வரமாகவும் சாபமாகவும் அமைந்து காணப்படுகிறது.
விடுதலைக்கான அனைத்துச் சாத்தியங்களைக் கொண்டிருந்த போதிலும் இத்தகைய சிக்கல் வாய்ந்த போராட்டத்தையும் நாம் மிகவும் புத்திபூர்வமாகவும் நடைமுறை சாத்தியப்பாட்டுக்கு ஏற்பவும் உயர்ந்த பட்ச நலனை பெறக்கூடிய வகையிலும் கொள்கை திட்டமிடல் முதல் அத்தியாயத்தில் இடம்பெற வேண்டும்.
அடுத்து இலங்கைத்தீவு காலனிதுவத்திடம் இருந்து விடுதலை பெற்ற போது ஒன்றுபட்ட இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஈழத்தமிழர்கள் ஆற்றிய பணியும், பங்களிப்பையும். ஆய்வதன் மூலம் தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசை அமைக்கின்ற போது ஆற்றப்படக்கூடிய பணிகளை வரையறை செய்ய முடியும்.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை
ஈழப்போராட்ட வரலாற்றுப் பின்னணி அதன் தொடர் விளைவுகள் பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கங்கள் அவற்றை களைவதற்கு மீள் ஒழுங்குபடுத்தலுக்குமான வழிவகைகள் பற்றிய ஆய்வும், அவற்றை சீர்வு செய்வதற்கான நடைமுறை சார்ந்த செயற்பாடு திட்டங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தி அவை பற்றி தெளிவு இரண்டாம் அத்தியாயத்தில் வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது.
அடுத்து இலங்கை தீவின் தேசிய இன ஒடுக்குமுறையின் வடிவங்களும், வகைகளும் பற்றிய தெளிவான பார்வையும் ஆய்வும் அதற்கான நடைமுறை சார்ந்த தக்கபூர்வமான முடிவுகளையும் வரையறை செய்வதாக இந்த மூன்றாம் அத்தியாயம் அமைய வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பல்வகை ஒடுக்குமுறை வடிவங்கள் பற்றிய அணுகுமுறை உதாரணமாக மொழி ஒடுக்குமுறை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், நீதி நிர்வாக ஏற்பாடுகள், இனவன்முறை வடிவங்கள், போலீஸ்-இராணுவ புலனாய்வு விசாரணை ஒடுக்குமுறை, பொய்யான திரிபடுத்தப்பட்டவரலாறு, மற்றும் கருத்தியல் வடிவங்கள், கலை கலாச்சார வடிவங்கள் எனப் பலவகை ஒடுக்குமுறைகளையும் அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட வேண்டும்.
மற்றும் சிங்களத் தலைவர்களின் மதியுகமும், இராஜதந்திர வியூகங்களும் தமிழ் தலைமைகளை ஏமாற்றிய விதங்கள் பற்றி அலசப்பட வேண்டும்.
அதே நேரம் சிங்களத் தலைவர்களதும், சிங்கள அரசியல் கட்சிகளினதும், பௌத்த நிறுவனங்களினதும், பிக்குகளினதும் பங்கும் பாத்திரமும் இவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் முன்மொழிவுகளும் இந்த அத்தியாயத்தில் அவசியமானது.
அடுத்து ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் அவற்றின் விளைவுகளும் பற்றிய ஒரு முழுமைப்படுத்தப்பட்ட பார்வை உள்ளடக்கப்பட வேண்டும்.
அத்தோடு அவ்வப்போது காணப்பட்ட அரசியல் யதார்த்தங்களும், கோரிக்கைகளின் தோற்றங்களும் பத்தி தெளிவுபடுத்துவதோடு, இன ஒடுக்கு முறைக்கு எதிரான அன்றைய கால போராட்ட முறைகள் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளின் விவாதங்களும், விண்ணப்பங்களும், மேற்கொள்ளப்பட்ட சாத்வீக போராட்டங்கள், அப்ப போராட்டங்களின் தோல்விகளும், படிப்பினைகளும் பற்றி தத்துவத்த ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஆராயப்பட்ட முடிவுகள் இந்த அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது.
அடுத்து வட்டுக்கோட்டைத் தீர்மானமும், தமிழீழ கோரிக்கையும், வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களுக்கான அறுவடையை வழங்காமைக்கான காரணங்கள் அதன் விளைவால் தோன்றிய தனிநாட்டுக் கோரிக்கையின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி தெளிவு அவசியமானது.
அதே நேரம் 1944 ஆம் ஆண்டு தமிழரின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம். அதனை அடுத்த தனிநாட்டுக்கான தமிழர் சுயாட்சிக் கழகமும், அதற்கு முன்னும் பின்னும். , சாத்வீக வழிப் போராட்டங்களும் பங்களிப்பு கலம்பட்டி ஆய்வு இந்த அத்தியாயத்தில் அவசியமானது.
அடுத்து ஆயதப் போராட்டம் அதன் வெற்றிகள், தோல்விகள் தமிழ் மக்களுடைய ஏற்படுத்திய கருத்து மண்டல மாற்றம், அல்லது சிதைவுகள், சமூக மாற்றம், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் மாற்றங்கள், அவற்றின் விளைவுகள், முள்ளிவாய்க்கால் பெருந்தோல்விக்கான காரணங்கள் பற்றிய முழுமைப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் இந்த அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரழிவும் பேரவலமும், இனப்படுகொலையும் அதற்குப் பின்னாளில் தோன்றியுள்ள உள்நாட்டு-வெளிநாட்டு அரசியலும் நிலைகளும் நிலைப்பாடுகளும் பற்றிய ஈழத் தமிழர் நிலைப்பாடும் சரிவர எடை போடப்பட்டு வரையப்பட வேண்டும். இதனை சிங்கள அரசியல், தமிழ் அரசியல், சர்வதேச அரசியல் என்ற பகுதிக்குள் அடக்கப்பட வேண்டும்
கொள்கை திட்டவரைபு
ஈழத்தமிழர்ளின் இறுதி இலட்சியமான தமிழீழ விடுதலைக்கான வழிவகைகள் எவை என நோக்குகையில் தற்போதைய சர்வதேச அரசியல் ஒழுக்கு மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் யதார்த்தம் என்பது பற்றி தெளிவான புத்தி பூர்வமான அணுகுமுறையும் திட்டங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்த அத்தியாயமே தமிழர்கள் விடுதலைக்கான திறவுகோலை இணங்காட்டுவதாக அமையும்.
இறுதியாக உலகளாவிய தேசியஇனப் போராட்டங்கள், அவற்றின் கோட்பாடுகளும், நடைமுறைகளும் வெற்றி பெற்ற போராட்டங்களும், தோல்வியடைந்த போராட்டங்களும் என்பவை பற்றிய தத்துவார்த்த பார்வையும், ஈழத் தமிழர்கள் சிங்கள அரசிடமிருந்து பிரிந்து செல்வதற்கான எதார்த்த நிலைகளும், சிக்கல்களும் பற்றிய ஆய்வுகளும் முடிவுகளும் தமிழீழ விடுதலைக்கான சாத்தியப்பாடுகளும், விடுதலைக்குப் பொருத்தமான போராட்ட தகைமைகளும், தலைமைத்துவங்களும் பற்றி இறுதியான முடிவுரை வரையறுக்கப்பட வேண்டும்.
குறிப்பிடப்படுகின்ற பரிந்துரைகளும், முன்மொழிவுகளும் ஒடுக்கப்படுகின்ற தமிழ் தேசிய இனத்தின் வாழ்வையும், இருப்பையும், வரலாற்றையும் தக்கவைக்கவும், மலையனக் குவிந்திருக்கும் தோல்விகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து தமது சுதந்திரமான நாட்டை மீட்க முடியுமென்ற தளராத நம்பிக்கையையும், விடுதலைக்கான சாத்தியங்களையும் இன்றைய சர்வதேச ஒழுங்கில் இந்து சமுத்திர அரசியலில் ஈழத் தமிழர்களுக்கான தமிழ் ஈழம் அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை ஒரு கொள்கை திட்டவரைபை வரைவுதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 23 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 6 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
