அரசியல்வாதிகளின் முகத்திரையை ஜனாதிபதி முன்னிலையில் கிழித்த பொலிஸ் மா அதிபர்
அண்மைய நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் அந்தந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கின் பேரிலேயே பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
அங்கு தீ வைப்பு மற்றும் சொத்து சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்திய பல உறுப்பினர்களிடம் அவர் கேள்விகளை கேட்பதற்கு ஆரம்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த அரசியல்வாதிகள் வாழும் பிரதேசங்களிலுள்ள பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கும் போது அந்த பதவிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் தான் தெரிவித்திருந்த போதிலும் அவர்களை நியமிக்க அழுத்தம் கொடுக்கவில்லையா? என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸ் மா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது மேற்பார்வையில் உரிய தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கிய பிரதேசத்தில் இவ்வாறான நிலைமைகள் எங்கும் ஏற்படவில்லை என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அவ்வாறு கூறியவுடன் அக்கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்திய உறுப்பினர்கள் அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.