வீரவங்ச மீது தாக்குதல் தொடுக்குமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை! - பிரமித பண்டார தென்னகோன்
அமைச்சர் விமல் வீரவங்ச மீது தாக்குதல் தொடுக்குமாறு பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இப்படியான எந்த ஆலோசனையும், எவரிடமும் இருந்து பொதுஜன பெரமுனவின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான தான் உட்பட எவருக்கும் கிடைக்கவில்லை என்பதைப் பொறுப்புக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாத்து கொண்டு, நாட்டு பொது மக்களின் அபிலாஷைகளுக்கு அமையச் செயற்படுவது அனைவரதும் கடமை எனக் கருதுவதாகவும் தென்னகோன் கூறியுள்ளார்.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்பியுள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நிபந்தனையின்றி குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



