ஜொவாட் சூறாவளியாக வலுவடைந்துள்ள தாழமுக்கம்: அவதானமாக செயற்பட எச்சரிக்கை
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் 'JAWAD' (ஜொவாட்) என்ற சூறாவளியாக வலுவடைந்து நேற்று வட அகலாங்கு 16.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.90 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளி வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையளவில் வட ஆந்திரப் பிரதேசம் - தென் ஒடிஷா கரைக்கு அப்பாற்பட்ட மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன் பின் அது வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிஷா கரையோரமாக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு - மத்திய மற்றும் வடக்கு - மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை வேளையில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
