வவுனியாவில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு
வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வெளியேற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளுமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பருவமழை காரணமாக வடக்கு மாகாணத்தின் நிலைப்பாடு தொடர்பில் 5 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண ஆளுனரால் மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ள நீரினை வெளியேற்ற நடவடிக்கை
குறித்த கடிதத்தில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேங்கி கிடக்கும் நீரை சுத்தப்படுத்தும் பணியை உள்ளூராட்சி திணைக்களத்தை மேற்கொள்ளுமாறும், நீர் வழிந்தோடாத வகையில் ஆக்கிரமிப்பாளர்களால் வேலி சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பின் உள்ளூராட்சி அலுவலக உத்தியோகத்தர்களால் துளையிடப்பட்டு நீரை வெளியேற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறிப்பிட்ட பகுதிகளின் கிராம அலுவலர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கரைச்சி - கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.