வங்கக் கடலில் புயல் அபாயம்: உடன் பாதுகாப்பான பகுதியை நோக்கி நகரவும் - வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடா பகுதியில் தற்போது ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ள நிலையில், அது அடுத்த சில மணிநேரங்களில் தாழமுக்கமாக வலுவடைய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலாக வலுவடையும் சாத்தியம்
இது தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும், வடக்கு அந்தமான் தீவுகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த அழுத்தப் பிரதேச தொகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடும்.
அத்துடன், ஒக்டோபர் 26ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதியில் இது புயலாகவலுவடையக் கூடிய அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு அட்சரேகை 10 இற்கும் 20 இற்கும் இடையிலும், கிழக்கு நெட்டாங்குக் கோடு 80 இற்கும் 95 இற்கும் இடையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிவுறுத்தல்
மேலும், தற்போது குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு