புதிய அரசமைப்பை நாம் உருவாக்கியே தீருவோம்! ஆளும் தரப்பு திட்டவட்டம்
தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வரவு - செலவுத் திட்டம்
"பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில்தான் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இந்த வரவு - செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
அத்துடன் வரவு - செலவுத் திட்டத்துக்குப் பல பெயர்களையும் சூட்டுகின்றார்கள். மக்களுக்குப் பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்குச் சூட்டிக்கொள்ளட்டும்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிவாரண முன்மொழி
இந்த வரவு - செலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எந்தத் தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை. வரவு - செலவுத் திட்டத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமும் இல்லாத வகையில் செயற்படுத்தப்படும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |