ராஜபக்சக்களின் அரசாங்கத்தை தெரிவு செய்த 69 இலட்சம் சிங்கள மக்களுக்கு நன்றி கூறுகின்றோம்: செ.மயூரன்
ராஜபக்சக்களின் அரசாங்கத்தைத் தெரிவு செய்த 69 இலட்சம் சிங்கள மக்களுக்கு நன்றி கூறுகின்றோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று விலைவாசிக்கு எதிராக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ராஜபக்சக்கள் ஒரு செயல் வீரர்கள் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நம்பிய சிங்கள மக்கள் அவர்களைத் தெரிவு செய்த 69 இலட்சம் மக்களுக்கு உண்மையில் நாங்கள் நன்றி கூறுகின்றோம் . இன்று அவர்களுடைய நினைப்பு இரண்டு வருடங்களுக்குள்ளே பொய்யாகிவிட்டது.
இவ்வாறு ஒரு மோசமான ஆட்சியாளர்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நாங்கள் ஒரு சிறந்த ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கின்றோம். எந்தவொரு நாட்டிலும் கடன் வாங்காமல் தனியாக நடாத்திய தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றது.
ஆனால் அவ்வாறான ஒரு நிலைமையை மாற்றி இன்று எந்தவொரு விடயங்களுக்கும் மக்களைப் போராட வேண்டிய ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் தள்ளியிருக்கின்றது. அந்தவகையிலே நாங்கள் இந்த மண்ணிலிருக்க வெட்கப்படுகின்றோம் . நாங்கள் இனியும் வாழ்வதற்கு அவர்களால் எதையும் சாதித்துவிட முடியாது.
கோமாளிகளைக் கொண்ட இந்த அரசாங்கம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அனைத்துப் பொருட்களின் இறக்குமதிகளையும் தடை செய்திருக்கின்றார்கள். இலங்கை மக்களாகிய இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களாகிய எங்களையும் ஏற்றுமதி செய்து விடுங்கள். எங்காவது சென்று நிம்மதியாக வாழ்ந்து கொள்ளுவோம்.
நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் இந்த நாட்டை ஒரு அரச சபை
போன்று கட்டி ஆழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய பதவிகளை விட்டு
எங்களுடன் நடு வீதியில் நின்று பாருங்கள். எங்களுடைய கஷ்டம் உங்களுக்குப்
புரியும். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்கத் தமிழ் சிங்கள மக்கள்
ஒன்றிணைய வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.