அரச ஊழியர்கள் தொடர்பான நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கருத்து! வலுக்கும் எதிர்ப்புக்கள்
அரச ஊழியர்கள் நாட்டிற்கு சுமை என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் ரோஹான் ராஜ்குமார் (Rohan Rajkumar) தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சருக்கு ஒரு விடயத்தினை நினைவுபடுத்துகின்றோம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், ஆட்சியாளர்களுமே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சுமையாக இருந்துள்ளார்கள் என்பதன் விளைவே இன்று நாடு பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் இருக்கக்கூடிய புகையிரத கடவைகளில் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 2064 ஊழியர்களில் பலர் இலங்கை பொலிஸாரினால் பலவந்தமாக இணைத்து கொள்ளப்பட்டார்கள்.
இன்றுவரை தொழில் உரிமை மறுக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் சட்டத்திற்கு முரணான விதத்தில் பொலிஸாரின் கீழ் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றோம் என்ற விடயத்தினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய முழுமையான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட போதும் ஜனாதிபதி, பிரதமரின் வாக்குறுதிகளை நாங்கள் எதிர்பார்த்து 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் எமக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊழியர்களுக்கான நிரந்தர ஊழியம் வழங்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என எதிர்பார்த்திருந்தோம்.
மீண்டும் நாங்கள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
கடந்த 8 ஆண்டுகளாக 250 ரூபாவில் எங்கள் வாழ்க்கை செலவினை கொண்டு நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை செய்த எங்களை இந்த அவல நிலைக்கு தள்ளி விட்டது வேறு யாரும் அல்ல முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவே (Mahinda Rajapaksa) ஆகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி இணைப்பாளர், நாமல் ராஜபக்க்ஷ (Namal Rajapaksa) எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாங்கள் இன்று அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும் நாட்டின் தொழிலாளர்களை இழிவாக கதைப்பதற்கு அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை நாட்டை இந்த நிலமைக்கு பின் தள்ளிவிட்டு தங்கள் அரசியல் தேவைகளுக்காக மக்களையும், அரச சக்கரத்தினையும், அரச ஊழியர்களையும் இழிவாக கதைப்பதை நிறுத்தி 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எமக்கான நிலையான நிதியினை ஒதுக்கி புகையிரத திணைக்களத்திற்குள் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று கோரி நிக்கின்றோம்.
இந்த நாட்டில் சுயநலம்மிக்கவர்கள் அதிகமாக வாழ்வதன் காரணமாக இந்த நாடு அதளபாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது.
மக்கள் அனைவரும் தங்கள் சுயநலத்தினை மறந்து நாட்டின் சுபீட்சமான
எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க வேண்டும், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும் என தெரிவித்துள்ளார்.