தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலி முகத்திடல், அனைத்து கட்சி போராளிகள் தூதுகுழுவினருக்கு இடையில் முக்கிய சந்திப்பு
"நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், "அனைத்து கட்சி போராளிகள்" (அகபோ) தூதுகுழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் கலந்துகொண்டுள்ளார்.
அத்துடன் அனைத்து கட்சி போராளிகள்" (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு

இதன்போது கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இச் சந்திப்பின் போது, இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் தொடர்ந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளைப் பேணி செயற்படுவது என்று முடிவானது.
மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டது.
தோட்ட சிறைகளுக்குள் வாழும் மக்கள்

இச் சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் "நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாகப் பாருங்கள்.
தமிழர்களாகிய எங்களுக்கு உணவு இல்லை, மின்சாரம் இல்லை, இவை பழகிப்போன பிரச்சினைகள். போர்க் காலத்தில் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.

கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தைக் கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாகப் பங்களியுங்கள்.
அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும். மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களைத் தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
இதன்போது அனைத்து கட்சி போராளிகள் (அகபோ) சார்பில் பேச்சாளர் கெலும் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், “நாம் உங்களைத் தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம். இன்று விலகிப் போக இருந்த கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று, உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன, மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரைச் சந்தித்தோம். மாற்றத்துக்காக எம்மை நேரடியாகப் பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை. நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளைப் பேண விரும்புகிறோம். மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாகக் கவனத்தில் எடுப்போம்'' என பதிலளித்துள்ளதாக மனோ கனேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan