நினைவுகளை நாமே அழிக்கின்றோம்! ஐங்கரநேசன் ஆதங்கம்
திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் நம் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவதன் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செயற்பாடுகள்
அவர் மேலும் கூறுகையில், “திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடக சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள்.

திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் தங்கள் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கின்றோம்.
தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எந்நாளும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். இது வெறுமனே நினைவுகளை மனத்திரையில் மீட்கும் சடங்குகள் அல்ல. மாறாக, அவர்களின் போராட்ட நியாயங்களையும் போராட்டத் தியாகங்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துகின்ற உயிர்ப்பான அரசியல் செயற்பாடுகளாகும்.
அரசியல் காரணங்களுக்காக போராடி மடிந்தவர்களின் நினைவேந்தல்களில் அரசியல் நீக்கம் செய்வது அவர்களின் போராட்ட நியாயங்களைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இத்தகைய நினைவேந்தல்களில் இனத்துவ அரசியலைத் தாண்டி கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களை சூறையாடுவதாகும்.
ஆனால், துரதிர்ஷ்டமாக தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் இன்று இவையே அதிகம் நிகழ்ந்தேறுகின்றன.
வேதனைக் குரல்

நினைவேந்தல் குழப்பங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு அப்பால் இவை நிகழ்ந்திருக்கவே கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் வேதனைக் குரலாக உள்ளது.
கட்சி வேறுபாடுகள் தாண்டி பேரினவாதிகள் ஒன்றுபட்டு நினைவேந்தியவர்களை கைதுசெய்யுமாறு கொக்கரிக்கிறார்கள். ஆனால், நாமோ பொது நினைவேந்தல்களில் கூட ஒன்றுபட முடியாமல் தமிழ்த் தேசியத்தை மழுங்கடித்து வருகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan