பொருளாதாரத்தை அடுத்த ஆண்டு வழமைக்கு கொண்டுவர முடியும்
இலங்கையின் பொருளாதார நிலைமையை இன்னும் ஓராண்டு காலத்தில் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த பொருளாதார நிலையை மீளவும் கொண்டுவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இளைஞர்களை சந்தித்து உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. எனினும் தற்பொழுது நாட்டின் பொருளாதார நிலைமை துரித கதியில் முன்னேற்றத்தை பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிக்கு வெளிநாட்டு வாழ் இலங்கைர்கள் வழங்கிய நிதி உதவி அந்த வெற்றிக்கு உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்று வீத வாக்குகளை பெற்றுக் கொண்ட போதும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்திருந்தது.
இதனால் கடன் செலுத்த முடியாது எனவும் அந்த அரசாங்கம் அறிவித்திருந்தது. அப்போதைய ஆட்சியாளரை மக்கள் ஆட்சியில் இருந்து விரட்டியிருந்தனர்.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு வழங்குவதும் மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி நிலை எதிர்காலத்தில் உருவாவதனை தவிர்ப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சவால்கள் காணப்பட்டது.
அனைத்து விதமான சர்வதேச நிறுவனங்கள் தரப்படுத்தல் நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள், இலங்கை நெருக்கடியில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக அறிவித்துள்ளன.
இவ்வாறு பொருளாதாரம் சரிவடைந்தால் மீண்டும் வழமைக்கு திரும்ப சுமார் பத்து ஆண்டுகள் தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு என்றால் 2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடி எதிர்நோக்கியது இது வழமைக்கு திரும்ப வேண்டுமானால் 2032 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
எனினும் நாம் 2019ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு அடுத்த ஆண்டு அளவில் செல்ல முடியும் என நாம் கருதுகின்றோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



