சர்வதேசத்திடம் நீதி கோரியே போராடுகிறோம்: - அரியநேத்திரன்
இலங்கை அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையும் வைத்து பிரயோசனம் இல்லையென்ற காரணத்தினால் சர்வதேசத்திடமே எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் வடகிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனைவிட சுதந்திரமாக நடமாடக்கூடிய நீதி,போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்ற போன்ற பல விடயங்களை இந்த அரசாங்கம் மறுத்துவருகின்றது.
கடந்த 73வருடங்களாக இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடித்தே வருகின்றது.2009 மே 19க்கு பின்னர் 11வருடங்கள் தற்போது கடந்துள்ளது.
இந்த 11வருடங்களும் தொடர்ச்சியான அவலங்களையே தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.வடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 1500 நாட்களை தாண்டியும் போராடி வருகின்றனர்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ஒன்றின் ஊடாக சர்வதேச பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் இல்லை.
சர்வதேசத்தினை எங்களை நோக்கி திருப்புகின்ற போராட்டமாகவே இதனைமாற்றியிருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.



