குடிநீர் சேவையை இடைநிறுத்தும் வலி.மேற்கு பிரதேச சபை..! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ். வலி. மேற்கு பிரதேச சபையின் குடிநீர் சேவையானது மதியம் 1 மணிக்கு முன்னர் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆலயம் ஒன்றின் பொது நிகழ்வுக்கு, ஆலய நிர்வாகத்தினர் வலி. மேற்கு பிரதேச சபை செயலாளரிடம் குடிநீரை வழங்குமாறு கோரியுள்ளார்.
இதன்போது செயலாளர் குடிநீருக்குப் பொறுப்பானவரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார். அதன்பின்னர் ஆலய நிர்வாகத்தினர் குடிநீருக்குப் பொறுப்பானவருக்கு அழைப்பு மேற்கொண்டு, ஆலய தேவைக்குக் குடிநீர் வழங்குமாறு கோரியுள்ளனர்.
தொலைபேசி அழைப்பு
ஆனால், குறித்த பொறுப்பாளர் தண்ணீர் வழங்கும் ஊழியர்கள் தமது கடமை நேரத்தை முடித்துவிட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார். குடிநீர் வழங்குபவர்களது சேவையானது காலை 6.30 தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை என அறியமுடிகிறது.
ஆனால், அவர்கள் ஒரு மணிக்கே வேலையை முடித்துவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பிரதேச சபையின் செயலாளருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அவர்கள் அதிகாலையே சேவைக்கு வருவதாகவும் அதனால் வேளையோடு வேலையை முடித்துவிட்டுச் செல்வதாகவும் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம்
6 மணிக்கு சேவைக்கு வந்து 8 மணித்தியாலங்கள் பணியில் ஈடுபட்டு விட்டுச் செல்வதாகக் கூறியுள்ளார்.
அதற்கு ஆலய நிர்வாகத்தினர், 8 மணிக்கு பணிக்கு வந்தால் 2 மணிக்கு தானே 8 மணித்தியாலங்கள் நிறைவடையும் எனக் கூறியபோது தடுமாறிய செயலாளர் இது குறித்து நாளை நேரில் வந்து பேசுமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.
பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் செயலாளர்களின் தன்னிச்சையான ஆட்டம் ஆரம்பித்துள்ளது.
இதனால் மக்கள் பிரதேச சபையின் மூலம் பெற்றுக் கொள்ளும் அடிப்படை வசதிகள் இன்றி அந்தரித்து வருகின்றனர்.
இது எல்லாவற்றையும் பொறுப்பு வாய்ந்தவர்கள் தெரிந்தும் தெரியாத போல் உள்ளார்களா அல்லது தெரியாமல் உள்ளார்களா என்றும், பிரதேச சபை செயலாளர்களின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
