நீர் வழங்கல் வேலை நிறுத்தம் இன்று முதல் ஆரம்பம்: மறு அறிவித்தல் வரை சேவைகள் முடக்கம்!
பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு, தமது தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (05.04.2023) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொழிற்சங்க அழைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் 13ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், ஆனால் உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சு வார்த்தைகள்
இதன்படி, மறு அறிவித்தல் வரை அனைத்து அலுவலக கடமைகளிலிருந்தும் வாடிக்கையாளர் சேவைகளில் கலந்துகொள்வதிலிருந்தும் விலகியிருக்கத் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தும் எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் விநியோகக் கட்டமைப்பு
தமது போராட்டம் காரணமாக நீர் விநியோகக் கட்டமைப்பு பழுதடையும் போது பழுதுபார்ப்பதில் தாமதம் ஏற்படும்.
எனவே, நீர் விநியோகம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.