நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதுவ மற்றும் ராஜாங்கனை, தெதுரு ஓயா, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர மற்றும் வெஹெரகல, அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம் ஆகியவற்றின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக தற்போது நீர் திறந்து விடப்பட்டு வருவதாக திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
ஆபத்தான சூழ்நிலை தொடர்பில் விளக்கம்
வெளியேற்றப்படும் நீரின் அளவு தாழ் நிலப் பகுதிகளில் எந்தபாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நீர்ப்பாசனத்துறை அலுவலகங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது.
அதன்படி, எதிர்கால சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், பருவமழை தற்போது தீவிரமாகப் பெய்தாலும், தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.